Sunday, 21 June 2020

ஆண்டவரை மறந்து, அற்பமானவற்றைத் தேடிய இஸ்ரயேல் மக்கள்*


*2 அரசர்கள் 17: 5-8, 13-15,18*

*ஆண்டவரை மறந்து, அற்பமானவற்றைத் தேடிய இஸ்ரயேல் மக்கள்*

*நிகழ்வு*

இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காகப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தான். தற்செயலாக அவன் தனக்கு எதிரில் பார்த்தபொழுது, ஒரு மனிதர் தன்னுடைய காதைச் சுவற்றையொட்டி வைத்துக்கொண்டு எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். நீண்டநேரமாக அவர் அப்படியே செய்துகொண்டிருந்ததால், அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ‘இந்த மனிதர் அப்படி என்னதான் அந்தச் சுவற்றிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கின்றார்! அதை நாம் தெரிந்துகொள்வோமே! என்று அவனுக்குள் ஆர்வம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் நேர்முகத் தேர்விற்குப் போகவேண்டும். அந்த நேர்முகத் தேர்வு அவனுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாக இருந்தது.

இப்படி இரண்டுக்கும் நடுவில் அவன் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான நிலையில் இருந்தான். இதற்கு நடுவில் நேரம் கடந்துகொண்டே இருந்தது. அவன் போகவேண்டிய இடத்திற்கான பேருந்துகள்கூட போய்க்கொண்டே இருந்தன. அப்பொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. ‘எதிர்த்திசையில் இருக்கும் மனிதர் சுவற்றிலிருந்து என்ன கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதைத் தெரிந்துவிட்டு, அதன்பிறகு நேர்முகத் தேர்விற்குச் செல்வோம்’ என்பதுதான் அவனுக்குள் தோன்றிய எண்ணம். இதற்குப் பின்பு அவன் சாலையைக் கடந்து, எதிர்த்திசையில் இருந்த மனிதரிடம் சென்றான்.

“ஐயா! உங்களை நீண்டநேரமாகக் கவனித்து வருகின்றேன். சுவற்றில் காதை வைத்துக்கொண்டு, எதையோ கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்... சுவற்றிலிருந்து அப்படி என்ன கேட்கின்றது என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான். “இந்தச் சுவற்றிலிருந்து என்ன கேட்கின்றது என்பது உனக்குத் தெரிந்துகொள்ளவேண்டுமா? நீயே காதை வைத்துக் கேள்” என்றார் அந்த மனிதர். உடனே அந்த இளைஞன் மிகவும் ஆர்வத்தோடு, சுவற்றில் காதைவைத்துக் கேட்கத் தொடங்கினான். ஒருநிமிடத்திற்கு மேலும் அவன் சுவற்றில் காதை வைத்துக் கேட்டபொழுதும் அவனுக்கு எதுவும் கேட்கவில்லை. அதனால் அவன் மிகுந்த ஏமாற்றத்தோடு, “ஐயா! நானும் ஒரு நிமிடத்திற்குள் மேல், இந்தச் சுவற்றில் என்னுடைய காதை வைத்துக் கேட்டுவிட்டேன். அப்படி எதுவும் எனக்குக் கேட்கவில்லையே!” என்றான்.

அதற்கு அந்த மனிதர், “நானும்கூட இந்தச் சுவற்றிலிருந்து ஏதாவது கேட்டுவிடும் என்பதற்காகத்தான் நீண்டநேரமாக இதில் காதைவைத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்” என்றார். இளைஞன் பேய் அறைந்தவன் போல் ஆனான். இதற்குப் பின்பு அவன் பேருந்தில் ஏறி, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு செல்வதற்குள், நேர்முகத் தேர்வே முடிந்தது. அதனால் அவன் தன் விதியை நொந்துகொண்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அற்பமான ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகராமலேயே போனான். இஸ்ரயேல் மக்களும் இப்படித்தான் ஆண்டவரைத் தேடாமல், அற்பமானவற்றை, அதாவது பாகால் தெய்வத்தைத் தேடினார்கள். இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. இஸ்ரயேல் மக்கள் செய்த தவறு என்ன, அதற்கு அவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*கடவுளைத் தேடாததால் ஏற்பட்ட அசீரிய மன்னனின் படையெடுப்பு*

இன்றைய முதல் வாசகத்தில் அசீரிய மன்னன் வடநாட்டின் மீது படையெடுத்து வந்து, அங்கிருந்தவர்களை நாடுகடத்திச் சென்றதைக் குறித்து வாசிக்கின்றோம். கி.மு.722 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தப் படையெடுப்பில் 27,290 பேர் நாடு கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இப்படியொரு படையெடுப்பு இஸ்ரயேல் மக்கள்மீது நடந்ததற்கு இன்றைய முதல் வாசகம் சொல்லக்கூடிய காரணம், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்திலிருந்து அழைத்த வந்த உண்மைக் கடவுளை மறந்துவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபட்டதுதான். இஸ்ரயேல் மக்களுடைய இந்த நன்றிகெட்ட தனத்தாலேயே, அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.

*திரும்புங்கள்; கடைப்பிடியுங்கள்*

இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய நன்றிகெட்ட தனத்தால் ஆண்டவராகிய கடவுளை மறந்து, அதனால் நாடுகடத்தப்பட்டாலும், ஆண்டவர் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, தன்னுடைய இறைவாக்கினர்கள் வழியாக அவர்களிடம், “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புகள்... என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்” என்று மீண்டும் மீண்டுமாகச் சொல்லிக்கொண்டேதான் இருந்தார் (எரே7: 3, 5, 18: 11). மக்கள்தான் கடவுளுடைய வார்த்தையைக் கேளாமல், தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டார்கள்.

ஆகையால், கடவுள் நம்முடைய வாழ்வில் பல்வேறு வல்ல செயல்களைச் செய்திருக்கின்றார் எனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் தருவதே சாலச் சிறந்தது.

*சிந்தனை*

‘அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்’ (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நமக்கு பல்வேறு நன்மைகள் செய்த, இன்றும் செய்துகொண்டிருக்கும் ஆண்டவருக்கு உண்மையாய் இருந்து, அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


*"GOD IS LOVE"*

No comments:

Post a Comment