அவர் தூயவராய் இருப்பதுபோல் அவரை எதிர்நோக்கி இருக்கின்ற அனைவரும் தம்மைத் தூயவராக்கவேண்டும்

*“அவர் தூயவராய் இருப்பதுபோல் அவரை எதிர்நோக்கி இருக்கின்ற அனைவரும் தம்மைத் தூயவராக்கவேண்டும்”*

*நிகழ்வு*

அது ஒரு சிறு நகரம். அந்த நகரத்தில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமுதன் தேநீர் கடை ஒன்று நடத்தி வந்தான். அந்தக்  கடை நன்றாக ஓடியது. மக்கள் அவனுடைய கடையிலிருந்து கிடைக்கும் தேநீர் மிகவும்  சுவையாக இருக்கின்றது என்பதற்காகவே கூட்டம் கூட்டமாக அவனுடைய கடைக்கு வந்து போனார்கள். 

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், அவனுடைய கடைக்குக் கூட்டம் வருவது குறைந்து, அவனுடைய கடைக்கு எதிரில் கடை போட்டிருந்த இன்னொருவனின் கடையில் கூட்டம் ஏறத் தொடங்கியது. இதற்கான காரணம் தெரியாமல் அமுதன் பெரிதும் குழம்பினான்.

இப்படியிருக்கையில் ஒருநாள் தன்னுடைய கடைக்கு வழக்கமாகப் பால் கொண்டு வரும் பால்காரரரிடம் அமுதன் தன்னுடைய நிலைமையைச் எடுத்துச் சொல்லி வருந்தினான். அவன் சொன்னதை அன்போடு கேட்டுக்கொண்ட பால்காரர், “அமுதா! நான்  சொல்கின்றேன் என்று என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். நீ போட்டுத்தரும் தேநீரும் சரி, பலகாரங்களும் சரி எதிரில் உள்ள கடைக்காரரனிடம் இருந்து கிடைக்கும் தேநீரையும் பலகாரங்களையும் விட சுவையாவை; ஆனால், அவன் தன்னுடைய கடையைச் சுத்தமாக வைத்திருக்கிறான். உன்னுடைய கடையைப் பார், எப்படி அழுக்குப் படிந்தும் பாத்திரங்கள் சுத்தமின்றியும் இருக்கின்றன என்று. அதனால் உன்னுடைய கடையைத் தூய்மையாக வைத்துக்கொள். அதன்பிறகு பார் உன்னுடைய கடை எப்படி மக்கள்கூட்டம் நிரம்பி வழிகின்றது என்று” என்று சொல்லிவிட்டு சென்றார். 

இதற்குப் பின்பு அமுதன் தன்னுடைய கடையையும் அதிலுள்ள பொருள்களையும் தூய்மையாக வைக்கத் தொடங்கினான். இதனால்  பால்காரர் சொன்னது போன்று அவனுடைய கடையில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. 

நாம் நம்முடைய அகத்தையும் சரி புறத்தையும் சரி தூய்மையாக வைத்திருக்கும்பொழுது அது பலருக்கும் பிடிக்கும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. மனிதர்கள் மட்டுமல்ல, நம்மைப் படைத்த கடவுளும்கூட நாம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார். நாம் ஏன் தூய்மையாக இருக்கவேண்டும்? தூய்மையாக இருப்பதனால் நாம் அடையும் பலன் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். 

*அவர் தூயவர்; பாவமில்லாதவர்*

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “இயேசுவை எதிர்நோக்கி இருக்கின்ற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்” என்று கூறுகின்றார். இயேசு தூயவர். காரணம் அவர் பாவமில்லாதவர். ஆகையால், அவரை எதிர்நோக்கி இருக்கின்ற ஒவ்வொருவரும் தூயவராக, பாவம் செய்யதவராக இருக்கவேண்டும். அதனை யோவான் மிக அழகுபட எடுத்துக்கூறுகின்றார். 

திருவிவிலியத்தில் கடவுளின் ‘தூய்மை’தான் அவருடைய மற்ற எல்லாப் பண்புகளையும்விட மிகவும் வலியுறுத்திப் பேசுகின்றது (லேவி 19:2). இன்னும் சொல்லப்போனால், கடவுளின் மற்ற பண்புகள் எல்லாம் ஒருமுறைதான் சொல்லப்படும்; ஆனால், அவருடைய தூய்மையோ ‘தூயவர், தூயவர், தூயவர்’ (எசா 6:3) என்று மூன்றுமுறை சொல்லப்படும். இதை வைத்துப் பார்க்கும்பொழுது, கடவுள் தூயவர்; அவருடைய திருமகன் இயேசுவும் தூயவர். அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூயவராக, மாசற்றவராக, பாவம் செய்யாதவராக இருக்கவேண்டும். அதனை யோவான் இன்றைய முதல் வாசகத்தில் வலியுறுத்திச்  சொல்கின்றார். 

*நாம் தூயவர்களாய் இருப்பதனால் அடையும் நன்மைகள்* 

திருத்தூதரான புனித யோவான் நாம் ஒவ்வொருவரும் தூயவராக இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசும் அதே நேரத்தில், நாம் தூயவராய் இருப்பதனால் அடையும் நன்மைகளையும் பற்றிப் பேசுகின்றார். ஆம், நாம் தூயவர்களாய் இருப்பதனால் கடவுளின் மக்களாகின்றோம் என்றும் அவரைக் கண்டுகொள்கின்றோம் என்றும் அவரை அறிந்துகொள்கின்றோம் என்றும் அவர் கூறுகின்றார்.  இது மறுக்க முடியாத உண்மை. இயேசுவும் கூட இதே கருத்தினைத்தான் மலைப்பொழிவில், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5:8) என்று கூறுகின்றார். 

ஆகையால், நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலுல், அகத்திலும் புறத்திலும் தூய்மையாக இருந்து, கடவுளின் அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். 

*சிந்தனை*

‘எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக’ (லேவி 20: 26) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவனைப் போன்று, இயேசுவைப் போன்று தூயவர்களாக இருக்க முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         

.

No comments:

Post a Comment