தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா

*தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா (ஜனவரி 03)*

*நிகழ்வு*

தந்தை குரியாகோஸ் அவர்கள் மன்னானம் என்ற இடத்தில் குருவாகப் பணிசெய்து கொண்டிருந்தபோது, ஒருநாள் விவசாயக் கூலிகள் சிலர் அவரை அணுகிவந்து, “ஐயா நாங்கள் வேலை பார்க்கும் பண்ணைகளில் இருக்கும் பண்ணையார்கள் எங்களுக்குப் போதிய ஊதியம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள், இதனால் எங்களுடைய குடும்பம், குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நீங்கள்தான் எங்களுக்கு கூலி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதார்கள். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த தந்தை குரியாகோஸ் பண்ணையார்களிடம் சென்று, “நீங்கள் உங்களிடத்தில் வேலை பார்க்கும் கூலியாட்களுக்கு ஊதியம் கொடாமல் இருப்பது பாவம். கடவுள் ஏழைகள் பக்கம் இருக்கிறார். கடவுள் இவர்கள் அழுவதைப் பார்த்தால், அதற்காக அவர் உங்களைப் பழிவாங்காமல் இருக்கமாட்டார்” என்றார்.

இதைக் கேட்ட பண்ணையார்கள் பயந்துபோய், அவர்கள் “தங்களிடம் வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு சரியான ஊதியம் தருவோம்” என்று வாக்குறுதி தந்தார்கள்.

*வாழ்க்கை வரலாறு*

தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா அவர்கள் 1805 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் உள்ள கைனகிரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஆறாவது குழந்தை. இவருடைய முன்னோர்கள் திருத்தூதர் தோமா வழிக் கிறிஸ்தவர்கள்.

குரியாகோஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை கைனகிரியிலேயே பெற்றார். அதன் பிறகு 1818 ஆம் ஆண்டு ஆண்டு குருமடத்தில் சேர்ந்து, 1829 ஆண்டு குருவாகத் அருட்பொழிவு செய்யப்பட்டார். 1831 ஆம் ஆண்டு அருத்தந்தை தாமஸ் பாலக்கல், அருட்தந்தை பொருக்கரா ஆகியோரின் உதவியுடன் அமல மரி கார்மேல் துறவற சபையை நிறுவினார். இது ஆண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சபையாகும். அதன்பிறகு CMC என்ற பெயரில் பெண்களுக்கான துறவற சபையையும் நிறுவி கேரளத் திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் கல்வி ஏழை எளியவருக்கு குறிப்பாக பெண்களுக்கு மறுக்கப்பட்டது. சமற்கிருத மொழியை பார்ப்பனர்கள்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்றதொரு நிலை இருந்தது. தந்தை குரியாகோஸ் அவர்கள்தான் கல்வி என்பது பொதுவுடைமை. அது எல்லாருக்கும் சொந்தமானது; அறிவே ஆயுதம் என உணர்ந்து ஒவ்வொரு ஆலயத்திற்குப் பக்கத்திலும் பள்ளிக்கூடங்கள் கட்டவேண்டும் என்று முன்மொழிந்தார். அதன்பயனாக எல்லா ஆலயங்களுக்குப் பக்கத்திலும் எல்லா மக்களும் கல்வி பெற பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன.     

தந்தை குரியாகோஸ் அச்சுத்துறையிலும் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாது. இயல்பிலே பாடல்கள் இயற்றுவதிலும், கவிதை எழுதுவதிலும் வல்லவராகிய குரியாகோஸ் நிறைய பாடல்புத்தகங்களை பதிப்பித்தார், அன்றாடம் குருக்கள் சொல்லக்கூடிய ஜெபப் புத்தகத்தை பதிப்பித்துத் தந்தார். இன்னும் சொல்லப்போனால் விவிலியத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டு திருச்சபைக்கு பெரும்பங்காற்றினார். தந்தையின் அன்றாடப் பணிகளுள் ஒன்று நோயாளிகளை சந்திக்கச் செல்வது. அவர் ஒவ்வொருநாளும் நோயாளிகள், முதியவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு நீண்ட நேரம் செலவழித்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார்.

தந்தை குரியாகோஸ் அவர்கள் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைச் செய்தாலும் அவர் ஜெபிப்பதற்கு மறப்பதே இல்லை. குறிப்பாக அவர் ஆலயத்தில் நீண்டநேரம் செலவுசெய்து இறைவனோடு உறவாடினார். அதிலும் சிறப்பாக அன்னை மரியிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார். இப்படி மக்கள் பணியும் இறைப்பணியும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று பாவித்து வாழ்ந்த தந்தை குரியாகோஸ் அவர்கள் 1871 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அதன்பிறகு இவருடைய உடல் மன்னானத்தில் உள்ள தூய வளனார் ஆலயத்தில் அடக்கம்செய்யப்பட்டது.  2014 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய குரியாகோஸ் அவருடைய விழாவைக் கொண்டாடக் கூடிய இந்த நாளில் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*அன்னை மரியிடம் ஆழமான பக்தி*
1986 ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்த அன்பிற்கினிய திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், குரியாகோஸ் அவர்களைக் குறித்து சொல்கிறபோது இவ்வாறு சொன்னார்: தந்தை குரியாகோஸ் அன்னை மரியாவின் மிகச் சிறந்த பக்தர். அவர் அன்னை மரியாவிடம் கொண்டிருந்த அளவு கடந்த பக்திதான் அவருக்கு எல்லா காரியங்களையும், பணிகளையும் செய்ய உந்து சக்தியாக இருந்தது”.

“அன்னையின் பிள்ளை அவலமாய் சாவதில்லை” என்பார்கள். ஆம், இது தந்தை குரியாகோசின் வாழ்வில் முழுமையாக நடைபெற்றது. அவர் அன்னையிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, அவர் எல்லா பணிகளையும் செய்ய உறுதுணையாக இருந்தது. நாம், அன்னை மரியாவிடம் ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருச்சபையின் இடைக்காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. ஒரு பணக்கார இளைஞன் குருமடத்தில் சேர்ந்து நல்ல குருவாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால் அவன் குருமடத்தில் சேர்ந்து படித்துவந்தான். அந்தக் காலத்தில் குருமடத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்கள் அனைத்தும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில்தான் இருக்கும். இது அந்த இளைஞனுக்கு மூளையில் ஏறவே இல்லை. அவனுக்காக பிரத்யோகமாக ஓர் ஆசிரியரை நியமித்து பாடங்களைச் சொல்லிக்கொடுத்தபோதும் அவனுக்கு ஒன்றுமே மூளையில் ஏறவே இல்லை. அவன் கற்றுக்கொண்ட இரண்டே இரண்டு வார்த்தைகள் Ave Maria என்பதுதான். அதுவும் மரியாவின் மீதுகொண்ட ஆழமான பக்தியினால்தான் அந்த இரண்டு வார்த்தைகளையும் கற்றுக்கொண்டான்.

அப்படிப்பட்ட அந்த இளைஞன் நோய்வாய்பட்டு திடிரென ஒருநாள் இறந்து போனான். அதனால் குருமடத்தில் இருந்தவர்கள் அவனை நல்லடக்கம் செய்தார்கள். ஓராண்டிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் சிலர் அவனுடைய கல்லறைக்கு சென்று வணக்கம் செலுத்த விரைந்தார்கள்.. அப்போது அந்த இளைஞனது கல்லறையில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்புக்கு உள்ளாக்கியது. ஏனென்றால் அவனது கல்லறையின் மேலே ஒரு லில்லிச் செடி பூத்திருந்தது. அந்த லில்லிச் செடியில் ஒரு பூ பூத்திருந்தது. அதில் இரண்டு இதழ்கள் இருந்தன. ஒரு இதழில் Ave என்றும் இன்னொரு இதழில் Maria என்றும் இருந்தது.

இதைப் பார்த்த அவருடைய நண்பர்கள் இந்த அற்புதமான லில்லிச் செடி எதிலிருந்து பூத்திருக்கிறது என்று கல்லறையைத் தோண்டிப்பார்த்தார். கல்லறையைப் தோண்டிப் பார்த்த நண்பர்கள் குலாம் இன்னும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். ஏனென்றால் அந்த அற்புத லில்லிச் செடி நண்பனின் வாயிலிருந்து பூத்திருந்தது. அப்போதுதான் அவர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொண்டார்கள். அந்த உண்மை இதுதான்: “அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் அவருடைய அடியார்கள் அன்னையால் மகிமைப்படுத்தப்படுவார்கள்”.

படிப்பு வராத அந்த பணக்கார இளைஞன் அன்னை மரியாளிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தான். அதனால் அன்னை அவனை மகிமைப்படுத்தினாள். இன்று நாம் விழாக்கொண்டாடும் தூய குரியாகோசும் அன்னையிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார். அதனால் அவர் ஆசியைப் பெற்றார். நாமும் அன்னையிடம் ஆழமான பக்திகொண்டு வாழும்போது அன்னையின் ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.

*நோயாளிகள் முதியவர்கள் வறியவர்கள்மீது அக்கறை*

தூய குரியாகோஸ் அன்னையிடம் எந்தளவுக்கு பக்தியும் அன்பும் கொண்டிருந்தாரோ, அதைப் போன்று அவர் நோயாளிகள், முதியவர்கள் சமுதாயத்தில் உள்ள வறியவர்கள்மீது அதிகமான அன்புகொண்டிருந்தார். எந்தளவுக்கு என்றால் கேரளத் திருச்சபையின் வரலாற்றில் நோயாளிகள், முதியவர்களுக்கு என்று முறையே மருத்துவ மனைகளையும், முதியோர் இல்லங்களையும் அமைத்தார். அவர்களை மாலை நேரங்களில் சந்தித்து நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தெம்பூட்டினார். அவர் அடிக்கடி சொல்லகூடிய வசனம், “பிச்சைக்காரர்களை வெறும் கையோடு அனுப்பாதீர்கள். உங்களால் முடிந்ததை பிறருக்குத் தரத் தவறாதீர்கள்” என்பதாகும்.

தூய குரியாகோசின் விழாவைக் கொண்டாடும் நாம் நோயாளிகள், அனாதைகள் ஆகியோர்மீது உண்மையான அன்போடு இருக்கிறோமா? அவர்களை தனிப்பட்ட அன்போடு கவனித்துக்கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு நேர்மையாளர்களைப் பார்த்து, “நான் பசியை இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” என்று கூறுவார். அத்தகைய பேறுபெற்றவர்கள் பட்டியலில் நாம் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை அந்தப் பட்டியலில் நாம் இல்லையென்றால் ஆண்டவர் சொன்ன இரக்கச் செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடித்து பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெறுவோம்.

ஆகவே, தூய  குரியாகோஸ் எலியாஸ் சாவரா அவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று ஏழை எளியவரிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், அதே வேளையில் அன்னை மரியிடம் ஆழ்ந்த பக்திகொண்டு வாழ்வோம். இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் 

.

No comments:

Post a Comment