தூய ஒனேசிம்
மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீர் அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். (லூக் 23: 43)
*வாழ்க்கை வரலாறு*
ஒனேசிம், பிரிகியாவைச் சேர்ந்தவர். இவர் கொலோசை நகரில் இருந்த பெரும் செல்வந்தராகிய பிலமோனிடம் அடிமையாய் வேலை பார்த்து வந்தார். ஒருசில காரணங்களால் ஒனேசிம் பிலமோனிடமிருந்து தப்பியோடி உரோமைச் சிறையில் இருந்த பவுலிடம் தஞ்சம் புகுந்தார். அங்கே சிலகாலம் அவரோடு தங்கி, அவருக்கு உதவிகள் புரிந்து வந்தார். இதற்கிடையில் பவுல், ஒனேசிம் தன்னோடு இருப்பது நல்லதல்ல, அவர் அவருடைய தலைவராகிய பிலமோனோடு இருப்பதே நல்லது என்று உணர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “ஒனேசிமை மன்னித்து, அவரை அடிமையாக அல்ல, அன்புச் சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் ஒனேசிமை பிலமோனிடம் அனுப்பி வைக்க, அவர் அவருடைய குற்றங்களை மன்னித்து தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.
சில நாட்களுக்குப் பின் ஒனேசிம், பிலமோனிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டுமாக பவுலோடு இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு திமொத்தேயுவுக்குப் பின், எபேசு நகரின் ஆயராக உயர்ந்தார். அங்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு எடுத்துரைத்தார். இயல்பிலே சிறந்த பேச்சாளராய் விளங்கிய இவர், மறையுரைகளை வல்லமையோடு ஆற்றினார். இந்த நேரத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. இதில் இவர் 18 ஆண்டுகள் சித்ரவதையை அனுபவித்தார். அத்தகைய தருணங்களில் எல்லாம் இவர் ஆண்டவர் இயேசுவின் மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். கி.பி. 95 ஆம் ஆண்டு, வதைப்போர் இவருடைய கால்களையும் தொடையையும் முறித்து இவரைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு ஒனேசிம் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சியானார்.
*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*
தூய ஒனேசிமின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
*1. மனமாற்றம்*
ஒனேசிமின் வாழ்க்கை வரலாற்றை ஒருகணம் நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக தன்னுடைய தலைவரிடமிருந்து தப்பியோடி, பின்னர் தன்னுடைய தவற்றை உணர்ந்து தலைவரிடம் சென்று, மன்னிப்புக் கேட்டு, அவரிடமே பணியாற்றுகின்றார். ஓனேசிமின் இந்த மனமாற்றம் பின்னாளில் அவரை ஒரு பெரிய புனிதராக மாற்றுகின்றது. பாவம் அல்லது தவறு செய்யும் எவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனமாறவேண்டும். அப்படி மனம்மாறுகின்றபோது அவருடைய வாழ்க்கை எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதிக்கின்ற முதல் போதனையே மனமாற்றம்தான். “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது (மாற் 1:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறுவதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
இந்த இடத்தில், நம்முடைய இந்திய நாட்டில் மிகப் பெரிய ஞானியை வாழ்ந்து மறைந்த சாது வாஸ்வானி அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும். ஒரு சமயம் சாது வாஸ்வானி நடத்தி வந்த மீரா பள்ளிக்கூடத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து அங்கிருந்த பொருள்களைத் திருடிக்கொண்டு ஓட முயன்றான். ஆனால், துரதிஸ்டவசமாக அவன் அங்கிருந்த காவலரிடம் மாட்டிக்கொள்ள, அவர் திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அந்தத் திருடனுக்கு கடுந்தண்டனை கொடுத்தார். இதற்கிடையில் செய்தி அறிந்த சாது வாஸ்வானி நீதிபதியிடம் சென்று, “ஐயா! அவன் திருடன் அல்ல, என் சகோதரன்தான். அவன் என்னுடைய பள்ளிக்கூடத்திலிருந்து எதையும் திருடவில்லை, அவனை விட்டுவிடுங்கள்” என்றார். மிகப் பெரிய ஞானி இவர். நிச்சயமாக இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து, நீதிபதி அவனை விடுதலை செய்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த திருடன் சாது வாஸ்வானியிடம் வந்து, “நான் செய்தது மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டீர்களே, இனிமேலும் நான் திருடமாட்டேன், மனமாறி நல்ல மனிதனாக வாழ்வேன்” என்று சூளுரைத்து அதன்படி வாழ முயன்றான்.
மிகப்பெரிய திருடனை சாது வாஸ்வானி மன்னித்த உடன், மனம்மாறி புதிய மனிதனாக வாழ முற்பட்டான். இறைவனும் நம் பாவங்களை மன்னித்துவிட்டார். ஆகவே, நாம் மனம்மாறி புதிய மனிதனாக வாழ்வதுதான் சிறப்பானது.
ஆகவே, தூய ஒனேசிமின் விழாவை கொண்டாடும் நாம் மனம்மாறி புதிய மனிதர்களாக வாழ்வோம்.
Saturday 22 February 2020
தூய ஒனேசிம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment