Wednesday 31 July 2019

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்

*மத்தேயு 11: 28-30*

*“இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்”*

*நிகழ்வு*

பெரிய கப்பல் ஒன்று கடலில் சென்றுகொண்டிருந்து. அதில் பெரிய பெரிய மனிதர்கெல்லாம் பயணம்செய்துகொண்டிருந்தார்கள். அதே கப்பலில் ஓர் இளம்பெண்ணும் பயணம் செய்தாள். அவளிடம் ஒரு (கெட்ட) பழக்கம் இருந்தது. அது என்னவெனில், சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களிடமிருந்து ஆட்டோகிராப் வாங்கி, அதைத் தன்னுடைய தோழிகளிடம் காட்டி, “பார்! எனக்கு எவ்வளவு பெரிய ஆட்களையெல்லாம் தெரியும்” என்று பெருமையடித்துக் கொள்வது. இதை அவள் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டு வந்தாள். 

அவள் பயணம் செய்துகொண்டிருந்தக் கப்பலில் அதிகம் கற்றுத்தேர்ந்த பேராயர் ஒருவரும் பயணம் செய்துகொண்டு வந்தார். அவரிடமிருந்து அவள் எப்படியாவது ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டும் என்று முடிவுசெய்தாள். எனவே, அவள் பேராயரிடம் சென்று, தன்னிடமிருந்த ஆட்டோகிராப் வாங்கும் புத்தகத்தை நீட்டி, ஆட்டோகிராப் போடுமாறு மிகவும் பணிவோடு கேட்டார். 

“வழக்கமாக நான் யார்க்கும் ஆட்டோகிராப் போடுவதில்லை. நீ வற்புறுத்திக் கேட்டதால் போடுக்கிறேன்” என்று சொல்லி ஆட்டோகிராப் போட்டார். உடனே அந்த இளம்பெண், “பேராயர் அவர்களே! உங்கள் பெயரோடு நீங்கள் படித்த படிப்பையும் உங்களுடைய தகுதியையும் போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்” என்றார். “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, ஒருநிமிடம் யோசித்தார். பின்னர், அவர் அவருடைய பெயர்க்குப் பின்னால், “மிகப்பெரிய பாவி” என்ற எழுதினார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம்பெண் அதிர்ந்து போய், அவரிடம் கொடுத்த ஆட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வேகமாக விரைந்து சென்றார். 

அந்த இளம்பெண், பேராயர் தான் படித்த படிப்பையெல்லாம் குறிப்பிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவர் ‘மிகப்பெரிய பாவி’ என்று குறிப்பிட்டது உண்மையில் வியப்பாக இருந்திருக்கும். பேராயர் தன்னை மிகப்பெரிய பாவி என்று குறிப்பிட்டார் எனில், அவரிடம் எந்தளவுக்குத் தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். நற்செய்தியில் இயேசு, “கனிவும் மனத்தாழ்மையும் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு “என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்கின்றார். இயேசுவிடம் இருக்கும் கனிவும் தாழ்ச்சியும் எத்தகையது? அவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதால் ஒருவர்க்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்பது பற்றிச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசு*

நற்செய்தியில் இயேசு, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்... நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்... அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் இரண்டு முதன்மையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். இரண்டு. அப்படி நாம் கற்றுக் கொள்கின்றபோது, நம்முடைய உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இந்த இரண்டு கருத்துகளையும் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை மனத்தாழ்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில்,  அவர் கடவுள் தன்மையில் விளங்கியபோதும் தன்மையே தாழ்த்தி, மனிதராகி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார். (பிலி 2: 6-11). மேலும் அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). இவ்வாறு இந்த உலகத்தில் யாரும் செய்யாததையும் செய்து, தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அதனால்தான் அவரால் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகின்றது. 

*இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் கிடைக்கும்*
இயேசு, நான் கனிவும் மனத்தாழ்மையும் உடைவன் என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்கின்றார். அப்படியானால், நாம் இயேசுவிடம் இருக்கும் கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வது அவசியமாகின்றது. 

இன்றைக்குப் பலர்க்கு மனத்தாழ்மை என்ற ஒன்று கிடையாது. அதனால்தான் அவரால்களால் சுமைகளை, மனக்கவலைகளை இன்ன பிறவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. என்றைக்கு ஒருவர் இயேசுவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கின்றாரோ அன்றைக்கு அவரால் நிச்சயம் துன்பங்களையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியும். அன்னை மரியா அப்படித்தான் மனத்தாழ்மையோடு இருந்தார். அதனால் அவருடைய வாழ்வில் வந்த வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. எனவே, நாமும் இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெறுவோம்.

*சிந்தனை*
 
‘முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்” (எபே 4:2) என்பார் பவுல். ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 


No comments:

Post a Comment