Monday 10 February 2020

*“எனது பெயருக்காகக் கோயில் கட்டவிருப்பவன் அவனே”*



*நிகழ்வு*

சிறுவன் ஒருவன் தன் தாய் தந்தையோடு கடற்கரைக்குச் சென்றான்.கடற்கரையில் அவனுடைய தாயும் தந்தையும் ஓரிடத்தில் அமர்ந்து பேசத் தொடங்கியதும், அவன் அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளிச்சென்று எதையோ கட்டத் தொடங்கினான்.

சிறுவனின் பெற்றோர் ஒருசில மணித்துளிகள் பேசி முடித்துவிட்டு, சற்றுத் தொலைவில் எதையோ மும்முரமாகக் கட்டிக்கொண்டிருந்த தங்களுடைய மகனிடம், “தம்பி! எதையோ தீவிரமாகக் கட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகின்றது...! அப்படி என்ன கட்டிக்கொண்டிருக்கின்றாய்...?” என்றார்கள். “நான் கோயில் கட்டிக்கொண்டிருக்கின்றேன்... அதனால் அமைதி காக்கவும்” என்றான் மகன். உடனே அவனுடைய தந்தை அவனிடம், “கோயில் கட்டுவது சரி... எதற்காக நாங்கள் அமைதி காக்கவேண்டும்...?” என்றார். அதற்குச் சிறுவன் அவர்களிடம், “கோயிலில் பேசிக்கொண்டா இருப்பீர்கள்; அமைதியாக அல்லவா இருப்பீர்கள். அதனால்தான் உங்களிடம் அமைதி காக்கவும் என்று சொன்னேன்” என்றான்.

சிறுவன் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன் பேசுவதைப் போன்று பேசுவதைக் கேட்டு, அவனுடைய தந்தை அவனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

கோயில் சாதாரண இடம் கிடையாது... ஆண்டவன் உறையும் இல்லம். அப்படிப்பட்ட இல்லத்தில் அல்லது இடத்தில் அமைதியாகவேண்டும் என்ற புரிதல் கடற்கரை மணலில் கோயிலைக் கட்டிய அந்தச் சிறுவனுக்கு இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியவனாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயிலைக் கட்ட விரும்புகின்றார். இதைத் தொடர்ந்து என்ன நடந்து என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*ஆண்டவருக்குக் கோயிலைக் கட்ட நினைத்த தாவீது*

ஆண்டவராகிய கடவுள் தாவீது அரசருக்கு சுற்றிலும் இருந்த எதிரிகளின் தொல்லையிலிருந்து ஓய்வு அளிக்கின்றார். இதற்குப் பின் அவர் மற்ற அரசர்களைப் போன்று கேளிக்கையில் ஈடுபடவோ அல்லது தன்னுடைய பெயர் விளங்குமாறு மாட மாளிகைகளை அல்லது கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, தான் கேதுரு மரங்களால் ஆன அரண்மனையில் இருக்கும்பொழுது ஆண்டவரின் பேழை கூடாரத்தில் இருக்கின்றதே. எனவே ஆண்டவருக்கென ஒரு கோயிலைக் கட்டலாம் என்று நினைக்கின்றார். தாவீது அரசர் இவ்வாறு எண்ணியது அவர் எப்பொழுது ஆண்டவரை நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது திருப்பாடல் 132: 1-5 வரையுள்ள பகுதியில் வருகின்ற இறைவார்த்தை இதற்குச் சான்று பகிர்கின்றது.

இது இவ்வாறு இருக்க, ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தானுக்குக் கனவில் தோன்றி, தன்னுடைய விருப்பத்தை தாவீது அரசரிடம் எடுத்துச் சொல்லுமாறு சொல்கின்றார். தன்னுடைய விருப்பமாக ஆண்டவராகிய கடவுள் நாத்தானிடம் சொன்னது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*ஆண்டவர்தாமே வீட்டைக் கட்டப் போவதாகச் சொல்லுதல்*

தாவீது அரசர் ஆண்டவருக்குக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக, தாவீது தனக்காகக் கோயிலை கட்டவேண்டாம் என்றும் தாமே அவருடைய வீட்டைக் கட்டப்போவதாகக் கூறுகின்றார். கடவுள் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த தாவீது அரசரை ஏன் கோயிலைக் கட்டவேண்டாம் என்று சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கான பதிலை நாம் 1 குறிப்பேடு 22:8 ல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய்; பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால் என் பெயருக்கு நீ கோயில் கட்டவேண்டாம்.”

ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தான் வழியாக தாவீதிடம் இவ்வாறு சொன்னது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும்; ஆனாலும் அதை தாவீது இறைவனின் திருவுளமென ஏற்றுக்கொள்கின்றார். இன்னும் சொல்லப்போனால், கடவுள் தாவீது அரசரிடம் கோயில் அல்லது இல்லம் என்று இன்னொன்றைச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*தாவீதின் அரியணை என்றுமே நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்படல்*

கடவுள் தாவீது அரசரிடம், தாமே வீட்டை அல்லது கோயிலைக் கட்டப்போவதாகச் சொல்வது எருசலேம் திருக்கோயில் அல்ல, அதை விட உயர்ந்தது. அது தாவீதின் வழி வந்த இயேசுவால் இப்புவியில் நிறுவப்பட்ட என்றுமுள்ள அரசு. அதைத்தான் ஆண்டவர் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசரிடம் சொல்கின்றார்.

சில சமயங்களில் தாவீது ஆண்டவரிடம் கேட்டது அவருக்கு நடக்காதது போன்று நமக்கும் நடக்காமல் இருக்கலாம். ஆனால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின் படி நடந்தோமெனில் கடவுள் அதைவிடவும் மேலான ஒன்றை நமக்குச் செய்து தருவார். ஆகையால், நாம் எப்பொழுதும் இறைவனின் திருவுளத்தின் நடக்கக் கற்றுக்கொள்வோம்.

*சிந்தனை*

‘நான் ஆண்டவரின் அடிமை; உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்’ (லூக் 1: 38) என்று மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்பார். நாமும் மரியாவைப் போன்று தாவீதைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


No comments:

Post a Comment