Monday, 10 February 2020

*“இயேசு கற்பிக்கத் தொடங்கினார்; மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது”*



*நிகழ்வு*

அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் இருந்த பாடகற்குழுவில் பெரியவர் இருந்தார். அவருக்குச் சரியாகப் பாட வராது. இருந்தும், அவரிடம் ஆள் பலமும் பண பலமும் இருந்ததால், அவர் தொடர்ந்து பாடகற்குழுவில் இருந்து ‘பாடல்’ பாடிவந்தார். . இதற்கிடையில் அவருடைய குரலைக் கேட்டுக் கடுப்பான ஒருசிலர் அங்கிருந்த பங்குத்தந்தையிடம் சென்று, “சுவாமி! அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து முதலில் நீக்குங்கள். அப்பொழுதுதான் பாடகர்குழு உருப்படும்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். பங்குத்தந்தையும் அவரை நீக்குகிறேன் என்று சொல்லிவிட்டு, ‘அவரைப் பாடகர்குழுவிலிருந்து நீக்கினால் சண்டைக்கு வருவாரோ?’ என்று அமைதியாக இருந்தார்.

ஒருநாள் அந்தப் பெரியவர் பாடிய விதத்தைப் பார்த்துவிட்டு கோயிலுக்கு வந்த பலரும் எரிச்சலடைந்தார்கள். அதனால் அவர்கள் வழிபாடு முடிந்ததும், நேராகப் பங்குத்தந்தையிடம் சென்று, “சுவாமி முதலில் அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து நீக்குங்கள். இல்லையென்றால் நாங்கள் யாரும் கோயிலுக்கு வரமாட்டோம்” என்று சற்று கோபத்தோடு சொல்லிவிட்டுப் போனார்கள்.

‘இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், பிரச்சனை பெரிதாகும்’ என்று நினைத்த பங்குத்தந்தை அந்தப் பெரியவரை அழைத்துப் பேசத் தொடங்கினார்; “ஐயா! நான் சொல்கிறேன் என்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். கோயிலுக்கு வருகின்ற பலர், ‘உங்களுடைய குரல் நன்றாகவே இல்லை... நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கவேண்டும்’ என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கிக்கொள்கிறீர்களா...?” என்றார். பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்தப் பெரியவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் பங்குத்தந்தையிடம், “உங்களைப் பற்றியும்தான் மக்கள் ‘சாமியாருக்கு சரியாகப் பிரசங்கம் வைக்கத் தெரியவில்லை’, ‘மக்கள் எல்லாரும் பிரசங்க நேரத்தில் தூங்கித் தூங்கி வழிகிறார்கள்’ என்று சொல்கின்றார். அதற்காக நீங்கள் இந்தப் பங்கைவிட்டு நீங்கிவிடுகிறீர்களா...?” என்றார். பங்குத்தந்தையால் எதுவும் பேச முடியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் பங்குத்தந்தையிடம் உண்மையைப் பேசினாரோ அல்லது அவருக்குப் பதிலளிக்கவேண்டும் என்பதற்காகப் பேசினாரோ என்று தெரியவில்லை; ஆனால், ஆண்டவருடைய வார்த்தையைப் போதிப்பது அல்லது கற்பிப்பது ஒரு கலை. அந்தக் கலை இயேசுவுக்கு மிகச் சிறப்பாக வந்தது. இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கியபொழுது, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது என்று வாசிக்கின்றோம். இதற்குக் காரணமாக இருந்தவை எவை என சிந்தித்துப் பார்ப்போம்.

*இறைவேண்டலோடு எல்லாவற்றையும் செய்த இயேசு*

இயேசு கற்பித்ததைக் கேட்க, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்ததற்கு முதன்மையான காரணமாக, அவர் செய்த இறைவேண்டலைச் சொல்லலாம். ஆம், இயேசு ஒவ்வொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினார். விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டிய இயேசு (மாற் 1: 35) சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரும் தன்னுடைய நண்பர் இலாசரை உயிர்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டினார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச் சான்றுபகர்கின்றன. அந்த வகையில் அவர் மக்களிடம் கற்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டியிருக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படியானால் இறைவார்த்தையை எடுத்துரைக்கும் குருவானவரும் சரி, இறையடியார்களும் சரி இறைவனிடம் வேண்டிவிட்டு இறைவார்த்தையைக் கற்பித்தால், அது பலருடைய உள்ளத்தைத் தொடுவதாக இருக்கும் என்பது உறுதி.

*அதிகாரத்தோடு போதித்த இயேசு*

இயேசு கற்பித்தது பலரையும் கவர்ந்திழுக்க இரண்டாவது முக்கியமான காரணம். அவர் அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் விண்ணிலிருந்து தரப்பட்டது (மத் 28: 18) என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக (மத் 23: 3) இல்லாமல், சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராக (லூக் 24: 19) இருந்தார். அதனால்தான் அவர் கற்பித்ததைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்

அப்படியானால் இறைவாக்கை எடுத்துரைக்கும் குருக்களின், இறையடியார்களின் வாழ்க்கை இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலில் சிறந்ததாக இருந்தது என்றால், அவர்கள் கற்பிப்பத்தைக் கேட்க மக்கள் வருவார்கள் என்பது உறுதி. இயேசு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு கதைகளையும் பயன்படுத்திப் போதித்தார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இயேசு இறைவேண்டலோடு எதையும் தொடங்கினார்; சொல்லிலும் செயலில் வல்லவராக விளங்கினார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், அவரைப் போன்று இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அவர் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

*சிந்தனை*

‘அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை’ (யோவா 7: 46) என்று இயேசுவைப் பார்த்து, காவலர்கள் சொல்வார்கள். இயேசுவின் பேச்சு, அவருடைய போதனை எல்லாரையும் கவிர்ந்திழுக்க அவருடைய இறைவேண்டலும் அவருடைய வாழ்வும் காரணமாய் அமைந்தன. நமது போதனையும் வாழ்வும் எல்லாரையும் கவிர்ந்திழுக்க இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


No comments:

Post a Comment