*27ஆம் வாரம் – வெள்ளி 11 10 2019*
*தூய இருபத்தி மூன்றாம் யோவான்
_“உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா” (மத் 16:18)_
*வாழ்க்கை வரலாறு*
தூய பேதுருவின் வழியில் 261 வது திருத்தந்தையாக உயர்ந்து, திருச்சபையின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டிய திருந்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான் எனப்படும் ஆஞ்சலோ கியூசெப்பே ராங்கால்லி இத்தாலியில் உள்ள பெர்கமோ என்ற இடத்தில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார்.
சிறுவயது முதலே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த ஆஞ்சலோ வளர்ந்து பெரியவராகியபோது, தான் எண்ணியதுபோன்றே குருவாக மாறினார். இதற்குப் பின்பு இவர் உரோமைக்குச் சென்று திருச்சபையின் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தன்னுடைய சொந்த மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். அப்போது மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தவர் இவரை தன்னுடைய செயலராக வைத்துக்கொண்டார். ஆயரின் செயலராக இருந்த இவர் ஆயரிடம் மிகவும் கீழ்ப்படிதலோடு நடந்துகொண்டார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆயரின் செயலராக இருந்த இவர், அப்போது நடைபெற்ற முதல் உலகப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்துவந்தார்.
ஆயரின் செயலராக இருந்து பின்பு இத்தாலில் உள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி அமைப்பின் (Propagation of Faith) தேசியத் தலைவராக உயர்ந்தார். பின் 1925 ஆம் ஆண்டு பேராயராக உயர்ந்தார். அந்நாட்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே சண்டைச் சச்சரவுகளும் குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அதனைத் தீர்த்துவைக்க இவர் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஆஞ்சலோவின் புகழ் எங்கும் பரவியது. ஆஞ்சலோவிற்கு பரந்துவிரிந்த ஞானமும் பிரச்சனைகளை எப்படித் தீர்த்து வைக்கவேண்டும் என்ற ஞானம் அதிகமாக இருந்தது. இறைவன் கொடுத்த அந்த கொடையினைக் கொண்டு, இவர் பல பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தார்.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவருடைய பெயரும் புகழும் வளர்ந்துவர, இவர் 1958 ஆம் ஆண்டு திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இருபத்தி மூன்றாம் யோவான் என்ற பெயரினைத் தாங்கி திருத்தந்தையாக வலம்வந்த இவர் ஐந்து ஆண்டுகளே திருத்தந்தையாக இருந்தாலும் பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்தார். குறிப்பாக நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடக்க பெரிதும் உழைத்தார்; தொழிலாளர் நல்வாழ்விற்காக தன்னுடைய குரலைப் பதிவுசெய்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருச்சபையின் வரலாற்றில் ஒரு மைகல்லாக விளங்கக்கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, திருச்சபையில் புத்தொழி பாய்ச்சினார்.
திருத்தந்தை அவர்கள், திருச்சபையின் வளர்ச்சிக்காக பலவேறு பணிகளைச் செய்தாலும் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். அதிலும் குறிப்பாக மரியன்னையின் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்துவந்தார். அந்த நம்பிக்கை அவருக்கு பலவிதங்கில் உதவியது. திருத்தந்தை அவர்கள் பிறசபையாரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள பலவிதங்களில் முயன்றார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைத்தது.
இப்படி அயராது பாடுபட்ட திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான் 1963 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 2014 ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*
தூய இருபத்தி மூன்றாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
*மரியன்னையிடம் பக்தி*
தூய திருத்தந்தை இருப்பதி மூன்றாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கின்றபோது, அவர் செய்த பல வியப்புக்குரிய காரியங்கள் நம்முடைய நினைவுக்கு வந்தாலும் அவர் மரியன்னையிடம் கொண்டிருந்த ஆழமான பக்திதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. மரியன்னையிடம் அவர் கொண்டிருந்த பக்திதான் அவர் பல பணிகளையும் சிறப்பாகச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. அவரைப் போன்று நாம் மரியன்னையிடம் பக்திகொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இங்கே மரியன்னிடம் ஆழமான பக்திகொண்டு வாழ்ந்த தூய தொன் போஸ்கோவின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 1869 ஆம் ஆண்டு, மே மாதத்தில் ஒருநாள் இத்தாலியில் உள்ள தூரின் என்ற இடத்தில் இருந்த லான்சோ என்ற பள்ளியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிற்கு தொன் போஸ்கோ சென்றிருந்தார். அவர் போகும்போது அந்த பள்ளிக்கூடத்தில் படித்துவந்த ஒருசில மாணவர்கள் சின்னம்மை என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி அவரிடத்தில் சொல்லப்பட்டது. உடனே அவர் அந்த மாணவர்களிடத்தில் சென்று, “கிறிஸ்தவர்களின் சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்று சொல்லி மரியாவிடம் ஜெபித்துவிட்டு அந்த மாணவர்களுக்காக ஜெபித்தார். மறுகணமே அவர்கள் அந்த நோயிலிருந்து விடுதலை அடைந்தார்கள். இது அங்கிருந்த எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.
மரியாவிடம் நம்பிக்கைகொண்டு ஜெபிக்கும்போது, நாம் வேண்டியது நிறைவேறும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
ஆகவே, தூய திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டுவாழ்வோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
*மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
*"GOD IS LOVE"*
No comments:
Post a Comment