_இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று கூறினார் (மாற் 16:15)_
*வாழ்க்கை வரலாறு*
டேனியல் கம்பொனி இத்தாலியில் உள்ள வெரோனாவில் 1826 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வெரோனாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, எப்படி தூய லயோலா இஞ்ஞாசியார் சவேரியாரிடம், “மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பாரெனில், அதனால் வரும் பயனென்ன?” என சொல்லிவந்தாரோ, அதுபோன்று இவரிடத்தில் அருட்தந்தை காங்கோ, “நீ ஆப்ரிக்காவிற்குச் சென்று பணிசெய்” என்று மீண்டும் மீண்டுமாகச் சொல்லி வந்தார். இது டேனியலின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அப்போதே இவருக்கு ஆப்ரிக்காவிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.
இதற்கிடையில் ஆப்ரிக்காவிற்குச் சென்று மறைப்பணியாற்றிவிட்டு திரும்பிவந்த ஒருசிலர், அங்கு பணிசெய்வது எத்துணை சவாலான காரியம் என்று எடுத்துச்சொன்னார்கள். இதுவும் அவரைச் சிந்திகக் வைத்தது. இப்படி இருக்கும்போது டேனியல் கம்பொனிக்கு ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. அது அவரிடத்தில் ஆப்ரிக்காவிற்கு சென்று பணி செய் என்று திரும்பத் திரும்பச் சொல்லியது. இதனால் இவர் குருத்துவ வாழ்விற்கு தன்னையே தயார்செய்து, 1854 ஆம் ஆண்டு குருவாக மாறினார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்ரிக்க மொழியைக் கற்பதும் மருத்துவத்தைக் கற்பதும் என்று தன்னையே தயார்செய்து 1857 ஆம் ஆண்டு தன்னோடு மேலும் ஐந்து குருக்களை சேர்த்துக்கொண்டு ஆப்ரிக்க மண்ணில் பணிசெய்ய புறப்பட்டுச் சென்று, சூடானின் தலைநகரான ஹர்தௌம் என்ற இடத்தில் இறங்கினார்.
இவரும் இவருடைய தோழர்களும் அங்கு சென்று இறங்கியபோது, இவர் நினைத்துப் பார்த்ததைவிடவும் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆம், மக்கள் அங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்தார்கள், எங்கு பார்த்தாலும் வறுமை நிலவியது. இவையெல்லாவற்றையும் விட மக்கள் அறியாமையில் இருந்தார்கள். இதனால் அந்த மக்களுக்கு மத்தியில் பணிசெய்வது மிகவும் சவாலாக இருந்தது. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் டேனியல் கம்பொனியும் அவருடைய தோழர்களும் அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தார்கள்.
டேனியல் கம்பொனி ஆப்ரிக்க மண்ணில் பணிசெய்வதற்கு மூன்றுவிதமான திட்டங்களை வகுத்துக்கொண்டார். ஒன்று, ஆப்ரிக்க மண்ணில் நற்செய்தியை பரப்புவதற்கு மண்ணின் மைந்தர்களிடமிருந்து குருக்களை உருவாக்குவது. இரண்டு. அங்குள்ள மக்களுக்கு பல்வேறுவிதமான உதவிகளைச் செய்வதற்கு தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள், நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவி பெறுவது. மூன்று, குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் துறவற சபையை உருவாக்குவது. இந்த மூன்று திட்டங்களையும் அவர் படிப்படியாக நடைமுறைப்படுத்தினார்; அதில் வெற்றியும் கண்டார். இவருடைய முயற்சியின் காரணமாக ஆப்ரிக்க மண்ணிலிருந்து நிறைய குருக்கள் உருவானார்கள். அதனால் அங்கு நற்செய்திப் பணிசெய்வது மிகவும் இலகுவானது. அடுத்ததாக டேனியல் கம்பொனிக்குத் தெரிந்தவர்கள், வசதி படைத்தவர்கள் என்று ஏராளமான பேர் ஆப்ரிக்க மக்களுக்கு உதவி செய்வதற்கு முன்வந்தார்கள். அவர்களிடமிருந்து பெற்ற உதவியை இவர் மக்களுக்காகப் பயன்படுத்தினார்.
மேலும் 1867 ஆம் ஆண்டு ஆண்களுக்கென்று ஒரு துறவற சபையும் 1872 ஆம் ஆண்டு பெண்களுக்கு என்று ஒரு துறவறசபையையும் ஏற்படுத்தி, ஆப்ரிக்க மண்ணில் நற்செய்தி பரவ பெரிதும் பாடுபட்டார். இவர் ஆற்றிவந்த பணிகளைப் பார்த்துவிட்டு திருத்தந்தை அவர்கள் இவரை 1878 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் முதல் ஆயராக ஏற்படுத்தினார்.
இவர் ஆற்றிவந்த அயராத பணியினால் இவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் இவர் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*
தூய டேனியல் கம்பொனியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
*நற்செய்தி அறிவிக்கின்ற தாகம்*
தூய டேனியல் கம்பொனியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற தாகம்தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமாக இருக்கின்றது. “நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்பார் பவுலடியார். அவருடைய வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டவராய் டேனியல் கம்பொனி ஆப்ரிக்க மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார். இவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற தாகம் நமக்கிருக்கின்ற என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும், இவரைப் போன்றே நற்செய்திக்காக நம்முடைய வாழ்வை அர்பணிக்கவேண்டும். அதுவே இவரை நினைவுகூருவதற்கான முழு அர்த்தத்தைத் தரும்.
ஆகவே, தூய டேனியல் கம்பொனியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
*மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
No comments:
Post a Comment