Saturday 2 November 2019

நிறைகளைப் பார்க்காமல் குறைகளைப் பார்க்கும் உலகம்


*லூக்கா 11: 15-26*

*நிறைகளைப் பார்க்காமல் குறைகளைப் பார்க்கும் உலகம்*

*நிகழ்வு*

          அது ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில், ஐந்தாம் வகுப்பு மாணவர்கட்கு வாய்ப்பாட்டுப் பாடம் நடத்தத் தொடங்கினார் ஆசிரியர். அதன் பொருட்டு அவர் கருப்பலகையில் இவ்வாறு எழுதத் தொடங்கினார்: “ஓர் எட்டு ஏழு, ஈரெட்டு பதினாறு; மூவெட்டு இருபத்து நான்கு... பைத்தெட்டு எண்பது.”

இதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் வாய்ப்பாட்டைத் தவறாக எழுதியிருக்கின்றார் என்று மாணவர்கள் அனைவரும் மெல்லச் சிரிக்கத் தொடங்கினார்கள். அவர்களைப் பார்த்த ஆசிரியர், “அன்பு மாணவச் செல்வங்களே! கரும்பலகையில் நான் எழுதிய வாய்ப்பாடு தவறாக இருக்கின்றது என்றுதானே சிரிக்கிறீர்கள். நான் எழுதியதை நன்றாகக் கவனித்தீர்கள் என்றால், முதல் வரியைத் தவிர, மற்ற எல்லா  வரிகளும் சரியாக இருக்கின்றன என்ற உண்மை உங்கட்குத் தெரியும். இதிலிருந்து உங்கட்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுததரப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.

“நான் எழுதிய வாய்ப்பாட்டில் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளும் சரியாக இருந்தாலும் உங்களுடைய பார்வைக்கு தவறாக இருந்த முதல் வரிதான் கண்ணில் பட்டது. இதுபோன்றுதான் மனிதர்களும்; நம்மிடம் ஓராயிரம் நல்ல பண்புகள் இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு, நம்மிடம் ஒரே ஒரு கெட்ட பண்பு இருந்தால் அதைப் பெரிதாகப் பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து முன்னேறிச் சென்றால்தான் உங்களுடைய வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருக்கும்.”

ஆசிரியர் சொன்ன இவ்வார்த்தைகட்குச் சரியென்பது போல் மாணவர்கள் தலையாட்டினார்கள்.

ஆம், இந்த உலகம் ஒருவரிடம் இருக்கும் நிறைகளைப் பார்க்காமல், குறைகளைத்தான் பார்க்கும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். அச்செயல் யூதர்களிடம் எத்தகைய எதிர்வினை ஆற்றுகின்றது? இயேசு அவர்கட்கு எத்தகைய பதிலளித்தார்? என்பவற்றைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

*தூய ஆவியாரின் வல்லமையால் வல்ல செயல்களைச் செய்த இயேசுவின்மீது விமர்சனம்*

          இயேசு பேய்பிடித்து பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார், அதுவும் தூய ஆவியாரின் வல்லமையால் (திப 10:38). இயேசு செய்த இந்த வல்லசெயலைப் பார்த்துவிட்டு, மக்கள் அவரைப் பாராட்டாமல், ‘தங்களிடைய பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கின்றார்’ என்று இறைவனுக்கு நன்றி செலுத்தாமல், ‘இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.

முதலில் யார் இந்தப் பெயல்செபூல் எனத் தெரிந்துகொள்வது நல்லது. பெயல்செபூல் என்றால் ஈக்களின் ஆண்டவர் (Lord of Flies) என்று பொருள். இதனைப் பெலிஸ்தியர்கள் வழிபாட்டு வந்தார்கள். யூதர்களைப் பொறுத்தளவில் பெயல்செபூல் ஒரு சாத்தான். அதனால்தான் இயேசு பேயை ஓட்டியதும், பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுகின்றார் என்று விமர்சனம் செய்கின்றனர். யூதர்கள் தன்னை இப்படி விமர்சனம் செய்துவிட்டார்களே என்று இயேசு மனம் சோர்ந்துவிடவில்லை. மாறாக, அவர் அவர்கட்குத் தக்க பதிலடி கொடுக்கின்றார். அது என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

*இயேசு கொடுத்த பதிலடி*

          யூதர்கள் இயேசுவின்மீது வைத்த விமர்சனத்திற்கு அவர் மூன்றுவிதமான பதில்களை அளித்து அவர்களை வாயடைக்கின்றார். இயேசு அளித்த முதல் பதில். தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும் என்பதாகும். சாத்தான் தன்னுடைய அரசு மேலும் மேலும் வளரவேண்டும் என்று விரும்புமே ஒழிய, அது அழிந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை. அந்த வகையில் இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டவில்லை; தூய ஆவியாரின் வல்லமையைக் கொண்டுதான் பேயை ஓட்டினார் என்பது உண்மையாகின்றது.

அடுத்ததாக இயேசு தன்னை விமர்சித்தவர்கட்கு அளித்த பதில், நான் பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுகின்றேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேயை ஒட்டுகின்றீர்கள் என்பதாகும். யூதர்களிடையே பலர் பேயை ஒட்டிவந்தார்கள் அவர்கள் எல்லாம் எந்த வல்லமையால் பேயை ஓட்டினார்கள்? யாரைக் கொண்டு பேயை ஓட்டினார்கள்? என்பதுதான் இயேசுவின் கேள்வியாக, அவர் அவர்கட்கு அளிக்கும் பதிலாக இருக்கின்றது. மூன்றாவதாக இயேசு அவர்கட்கு அளித்த பதில், வலியவரை அவரைவிட வலியவர்தான் வெற்றி கொள்ள முடியும் என்பதாகும். இயேசு பேயை ஓட்டினார் என்றால், அவர் பேயைவிட வலிமை வாய்ந்தவர் என்றுதான் அர்த்தம். இவ்வாறு இயேசு தான் பெயல்செபூலைக் கொண்டு அல்ல, தூய ஆவியாரின் வல்லமையால் பேயை ஓட்டினேன் என்பதை நிரூபிக்கின்றார்.

இயேசு பேயை ஓட்டியதும் அதைத் தொடர்ந்து யூதர்கள் அவரை விமர்சித்ததும் நமக்கொரு முக்கியமான செய்தி சொல்கின்றது. அதுதான் நல்லதைப் பார்க்கப் பழகுதலாகும். ஆகையால், நாம் யூதர்களைப் போன்று இல்லாமல், இயேசுவைப் போன்று அடுத்தவர் நல்லது செய்கின்றபோது பாராட்டக் கற்றுக் கொள்வோம்.

*சிந்தனை*

          ‘உலகில் நான் என்னைத் தவிர வேறொரு சகோதரனைக் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் என் குறைகள் எனக்குத் தெரியும்’ என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நாம் அடுத்தவரைக் குறைகூறிக்கொண்டிருக்காமல், பிறர் நல்லது செய்கின்றபோது பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

*மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*

*"GOD IS LOVE"*

No comments:

Post a Comment