Wednesday 31 July 2019

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்

*மத்தேயு 10: 34-11:1*

*“தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்”*

*நிகழ்வு*

நெதர்லாந்து நாட்டில் பிறந்த மிகச்சிறந்த ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals) என்பவர். அவருடைய ஓவியங்கள் இன்றைக்கும் மக்களால் வியந்து பாராட்டப்படுகின்றன. ஆனால், அவர் ஒரு பயங்கரக் குடிகாரர். குடித்துவிட்டால் அவர் சுயநினைவை இழந்து எங்காவது விழுந்து கிடப்பார். மக்கள்தான் அவரை அவருடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு வந்து, படுக்கையில் கிடத்துவார்கள். இது ஒருநாள்கூடத் தவறாமல், நாள்தோறும் நடந்துகொண்டிருந்தது. மக்களும் அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததால், அவர் குடித்துவிட்டுச் சாலையில் கிடப்பதைப் பெரிதாகக் கருதாமல், அவரைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார்கள். 

இதற்கிடையில் மக்கள் அவரைப் படுக்கையில் கிடத்துகின்றபோது அவர், “கடவுளே! மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் மன்றாடிவந்தார். இதைக் கவனித்த ஒருசிலர்,  அவ்வார்த்தைகளை அவர் உணர்ந்துதான் சொல்கிறாரா? அல்லது கேளிக்கைகாகச் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினார்கள். எனவே அவர்கள் பிரான்ஸ் ஹால்ஸினுடிய படுக்கைக்கு மேலிருந்த தளத்தில் நான்கு துளைகளைப் போட்டு, அவற்றின் வழியாக நான்கு கயிறுகளை இறக்கி, அவற்றை அவர் படுக்கும் கட்டிலின் நான்கு கால்களோடும் இறுகக் கட்டினார்கள். 

வழக்கம் போல் குடித்துவிட்டுத் தெருவோரத்தில் கிடந்த பிரான்ஸ் ஹால்சை மக்கள் தூக்கிக்கொண்டு அவருடைய படுக்கையில் கிடத்தினார்கள். அவர் கட்டிலில் கிடத்தப்பட்டதும் எப்போதும் சொல்கின்ற, ‘கடவுளே மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்று சொல்லி மன்றாடத் தொடங்கினார். உடனே கட்டிலோடு பிணைக்கப்பட்ட கயிறுகளைப் பிடித்துக்கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் வேகமாக இழுக்கத் தொடங்கினார்கள். தான் மேலே செல்கின்றோம் என்பதை உணர்ந்த பிரான்ஸ் ஹால்ஸ், “‘கடவுளே! பாவியாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்’ என்றுதான் வேண்டினேன்... ஆனால், இவ்வளவு சீக்கிரம் என்னை மேலே எடுத்துக்கொள்ளும் என்று வேண்டவில்லை” என்றார். 

‘இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் போய்விடவேண்டும்’ என்று சொல்பவர்கள்கூட உயிர் வாழவும் அல்லது உயிரைக் காத்துக்கொள்ளவும் தான் ஆசைப்படுகின்றார்கள். இப்படித் தங்களுடைய உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர் என்று நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*உயிரைக் காக்க நினைப்பவர் இழந்துவிடுவர்* 

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார். அவ்வாறு அவர் அவர்களை அனுப்புகின்றபோது, அவர்கட்கு ஒருசில அறிவுரைகளையும் சிந்தனைகளையும் தருகின்றார். அவற்றில் ஒன்றுதான், ‘உயிரைக் காக்க நினைப்பவர் அதை இழந்துவிடுவர். உயிரை இழக்க நினைப்பவரோ, அதைக் காத்துக்கொள்வார்’ என்பதாகும். 
முதலில் உயிரைக் காத்துக்கொள்ள நினைப்பவர் எப்படி அதை இழக்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தன்னைப் பின்பற்றுகின்றவர்கள், மற்ற எல்லாரையும் விட தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தன்னுடைய சிலுவையைச் சுமக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சிலுவையை சுமப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக ஒருவர் உயிரையும் தரவேண்டும். உயிரைத் தரவேண்டுமே என்று நினைத்துக்கொண்டு ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதையும் சிலுவை சுமப்பதையும் நிறுத்திக்கொண்டுவிட்டால், அவர் இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தகுதியற்றவராய்ப் போவது மட்டுமன்றி, வாழ்வையும் இழக்கின்றார். ஏனென்றால், இயேசுதான் வாழ்வாக இருக்கின்றார் (யோவா 14:6). ஆகையால், சிலுவையைச் சுமப்பதால் வரும் துன்பங்கட்குப் பயந்து ஒருவர் இயேசுவைப் பின்தொடராமல் இருந்தால், அவர் தன்னுடைய வாழ்வை இழந்து விடுவார் என்று  உறுதி. 

*உயிரை இழக்க நினைப்பவரோ காத்துக்கொள்வர்*

உயிரைக் காக்க நினைப்போர், அதை இழந்துவிடுவர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், உயிரை இழக்க நினைப்பவர் அதை எவ்வாறு காத்துக்கொள்கின்றனர் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

மேலே நாம் சிந்தித்துப் பார்த்ததுபோல, இயேசுவைப் பின்பற்றுவதால் சிலுவையை சுமக்க நேரிடலாம். அதன்பொருட்டு உயிரையும் இழக்கலாம். அவ்வாறு நாம் உயிரை இழக்கின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்கின்றோம். எப்படி என்றால், இயேசு சொல்வதுபோல, கோதுமை மணி விழுந்து மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும். மடியாவிட்டால் அது அப்படியேதான் இருக்கும் (யோவா 12:24) அதுபோன்றுதான் இயேசுவின் பொருட்டு நம்முடைய வாழ்வை  இழக்கத் துணிகின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால், நம்முடைய உயிரைக் காக்கவே முடியாது. 

*சிந்தனை*
‘என் பெயரின் பொருட்டு வீடுகளையோ சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறுமடங்காகப் பெறுவர், நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்’ (மத் 19:20) என்பார் இயேசு. ஆகவே, இயேசுவின் பொருட்டு எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

No comments:

Post a Comment