Wednesday, 31 July 2019

தூய பொனவெந்தூர் வாழ்க்கை வரலாறு

*தூய பொனவெந்தூர் (ஜூலை 15)*

*நிகழ்வு* 

பொனவெந்தூரின் சமகாலத்தவர் ‘இறையியலாளர்களின் இளவரசராகிய’ தூய தாமஸ் அக்குயினாஸ். பொனவெந்தூரின் நெருங்கிய நண்பரும்கூட. அவர் அப்போதுமே பொனவெந்தூரிடம் விளங்கிய அறிவுத் திறனைக் கண்டு வியந்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர் இதை நேரடியாகவே அவரிடம் கேட்டுவிட்டார், “உங்களுக்கு இவ்வளவு ஞானமும் அறிவுத்திறனும் எங்கிருந்து கிடைத்தது. அதற்கு அவர் தாமஸ் அக்குயினாசை தன்னுடைய துறவற மடத்தில் இருந்த சிற்றாலயத்திற்கு அழைத்துக்கொண்டு போய், அங்கிருந்த பாடுபட்ட சிரூபத்தைச் சுட்டிக்காட்டி, “இயேசுவின் இந்த பாடுபட்ட சிரூபத்திலிருந்தே நான் எல்லா அறிவையும்  ஞானத்தையும் பெறுகிறேன்” என்றார். இதைக் கேட்ட தாமஸ் அக்குயினாஸ் வியந்து நின்றார்.

*வாழ்க்கை வரலாறு*

பொனவெந்தூர் கி.பி. 1221 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள தஸ்கனி (Tuscany) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஜான், தாய் ரிடெல்லா என்பவர் ஆவர். பொனவெந்தூரின் இயற்பெயர் ஜான் என்பதுதான். இவருக்கு நான்கு வயது நடந்து கொண்டிருந்தபோது கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் யாராலும் இவரிடமிருந்த நோயைக் குணப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை. இதனால் இவருடைய தாய் இவரை தூய பிரான்சிஸ் அசிசியாரிடம் எடுத்துக்கொண்டு போனார். அவர் முழந்தாள் படியிட்டு ஜெபிக்க, இவரிடம் இருந்த நோயானது முற்றிலுமாக நீங்கிப் போனது. அப்போது பிரான்சிஸ் அசிசியார் (Bena Venture) நல்லதே நடக்கட்டும் என்பதைக் குறித்துக்காட்டும் அடையாளமாக பொனவெந்தூர் என்ற பெயரை அவருக்கு வைத்தார். அன்றே பொனவெந்தூரின் தாய் தன் மகனை பிரான்சிஸ்கன் சபையில் சேர்த்து, குருவாக அழகு பார்க்க நினைத்தார்.

பொனவெந்தூரின் தாயின் கனவு 1238 ஆம் ஆண்டு நிறைவேறியது. ஆம், பொனவெந்தூர் தன்னுடைய பதினெட்டாம் வயதில் பிரான்சிஸ் சபையில் குருமாணவராகச் சேர்ந்தார். அவர் பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்பது ஆண்டுகள் மெய்யியல் மற்றும் இறையியலைக் கற்றுத் தேர்ந்து அதிலே புலமையும் பெற்றார். இவரிடம் விளங்கிய அறிவுத் திறனையும் புலமையும் ஞானத்தையும் கண்டு எல்லாரும் வியந்தார்கள். இவரிடம் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு 1243 ஆம் ஆண்டு இவரை சபைத் தலைவராக நியமித்தார்கள். இவர் சபைத் தலைவராக (Genaral) நியமிக்கப்பட போது, இவருக்கு வயது வெறும் 36 தான்.

பொனவெந்தூர் சபைத் தலைவராக பதவி உயர்ந்தபிறகு சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். துறவறத்தார் ஆன்மீக வாழ்விலும், ஜெப வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் சிறந்தோங்கி வளர நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். இன்றைக்கு நாம் சொல்லக்கூடிய மூவேளை ஜெபம்கூட இவர் தொடங்கி வைத்ததுதான். இவர் ஆற்றிய பணிகளைப் பார்த்துவிட்டு, துறவறத்தார் இவரை பிரான்சிஸ்கன் சபையின் இரண்டாம் நிறுவுனர் என்று அன்போடு அழைத்தனர்.

பொனவெந்தூர் மிகச் சிறந்த ஆன்மீக எழுத்தாளராகவும்  விளங்கினார். தன்னுடைய எழுத்துத் திறமையின் வாயிலாக இவர் திருச்சபைக்கு அளித்த பங்களிப்பு ஏராளம். பொனவெந்தூரிடம் விளங்கிய அறிவுத்திறனையும், ஜெப வாழ்வையும் பார்த்துவிட்டு திருத்தந்தை இவரை அல்பனா என்ற நகருக்கு ஆயராக ஏற்படுத்தினார். தனக்கு எந்த ஒரு பதவியும் பொறுப்பும் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்ட போதும் அவருக்கு இப்படிப்பட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை மிகச் சிறப்பாகச் செய்தார். இறைமக்களை ஆன்மீக வாழ்விலும் சமூக மற்றும் பொருளாதார வாழ்விலும் சிறந்த விதமாய் கட்டி எழுப்பி மக்களுக்கு நல்லதொரு ஆயனாக விளங்கினார். ஆயர் பொறுப்பினை சிறப்பாகச் செய்ததனால் திருத்தந்தை பத்தாம் கிரகோரியார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இப்படியாக பொனவெந்தூர் மேலும் மேலும் உயர்ந்துகொண்டிருந்தார்.

1270 களில்  நடைபெற்ற லயன்ஸ் பொதுச்சங்கத்தில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்துமே இவர் தீர்மானித்துத் தந்ததுதான். ஒரு கர்தினாலாக இருந்து, திருத்தந்தைக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்படி பலவேறு பணிகளை திருச்சபையின் வளர்சிக்காக செய்த பொனவெந்தூர் 1273 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1482 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார். 1588 ஆம் ஆண்டு இவர் மறைவல்லுனராக உயர்த்தப்பட்டார். திருச்சபையில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் ஐந்து மறைவல்லுனர்களில்  இவரும் ஒருவர்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*   

தூய பொனவெந்தூரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

*1. தாழ்ச்சி*

தூய பொனவெந்தூர் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தனக்கு எந்த பதவியும்  பொறுப்பும் வேண்டாம் என்றுதான் வாழ்ந்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கு மேலும் மேலும் பதவிகள் வந்தன.

ஒருசமயம் திருத்தந்தை பத்தாம் கிரோகோரியார் இவரை கர்தினாலாக அறிவித்து,  கர்தினாலுக்கு உரிய  தொப்பியை தன்னுடைய பணியாளர்களிடம் கொடுத்து, அவருக்குக் கொடுக்கச் சொன்னார். திருத்தந்தையின்  வேண்டுகோளுக்கு இணங்க பணியாளர்கள் பொனவெந்தூரிடம் கர்தினாலுக்கு உரிய தொப்பியை கொடுக்கச் சென்றார்கள். அவர்கள் சென்ற நேரம் பொனவெந்தூர் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து திருந்தந்தையின் பணியாளர்கள், ஒரு ஆயர் –கர்தினாலாக உயர்த்தப்பட்டவர் – இப்படியா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருப்பது என்று வியந்துபோய் நின்றார்கள். அவர்கள் தாங்கள் வந்த செய்தியை அவரிடத்தில் சொன்னபோது, அவர், “நீங்கள் கொண்டுவந்த கர்தினாலுக்கு உரிய தொப்பியை பக்கத்தில் உள்ள மரத்தில் வைத்துவிட்டுப் போங்கள், நான் இந்த பாத்திரங்களைக் கழுவிவிட்டு, அதன்பிறகு வந்து, அந்த கர்தினாலுக்குரிய தொப்பியை அணிந்துகொள்கிறேன்” என்றார். அந்தளவுக்கு பொனவெந்தூர் தாழ்ச்சியாக, பேரையும் புகழையும் விரும்பாதவராக இருந்தார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியை அணிகலனாகக் அணிந்துகொண்டு வாழ்கிறோமா? அல்லது ஆணவத்தோடு வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்வார், “தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் (லூக் 14:11). ஆம் நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பதற்கு தூய பொனவெந்தூரின் வாழ்வே நமக்கு நமக்கு சான்றாக இருக்கின்றது. ஆகவே, நமது வாழ்வில் தாழ்ச்சியைக் கடைப்படித்து வாழ்வோம்.

ஒருமுறை ஆயிரம் நோட்டும், ஒரு ரூபாய் ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு அலுத்துக்கொள்வது போலப் பெருமையடித்துக்கொண்டது. “நடிகர்கள் கையில் புரள்கிறேன்! தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்கிகிறேன்!! ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன்! வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டாய்”. அதற்கு ஒரு ரூபாய் அமைதியாகச் சொன்னது. “நான் அங்கெல்லாம் போய் அவஸ்தைப்பட்டதே கிடையாது. கோவில் உண்டியல்களில் கடவுள் என்னைப் பாதுகாக்கின்றார். மண் உண்டியல்களில் குழந்தைகள் என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன”. இதைக் கேட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு எதுவும் பேசாது அமைதியானது. ஆணவத்தோடு இருந்தால் அழிவையும், தாழ்ச்சியோடு இருந்தால் உயர்வையும் சிந்திப்போம் என்பதை இந்தக் கதை நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய பொனவெந்தூரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் அவரிடம் விளங்கிய தூய வாழ்க்கையை, தாழ்ச்சியை நமதாக்குவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

No comments:

Post a Comment