*தூய கமிலஸ் தே லெல்லிஸ் (ஜூலை 14)*
_“இயேசுவே என் இறைவனே! உம் மக்களும் உம் சகோதர சகோதரிகளுமான நோயாளிகளுக்கு என் முழு உள்ளத்தோடு சேவை செய்ய நான் வாக்களிக்கின்றேன்” – தூய கமிலஸ்_
*வாழ்க்கை வரலாறு*
கமிலஸ், இத்தாலியில் உள்ள அப்ருசி என்னும் இடத்தில் 1550 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தையே இல்லை. பல்வேறு விதமான ஒறுத்தல் மற்றும் பக்தி முயற்சிகளுக்கு பின்னேதான் இவர் பிறந்தார்.
கமிலசின் தந்தை ஒரு போர்வீரர். எனவே இவரும் தன் தந்தையை போன்று போர்வீராக மாற ஆசைப்பட்டார். இவர் ஆசைப்பட்டது போலவே பின்னாளில் ஒரு போர்வீரராகி துருக்கியர்களுக்கு எதிரான போரில் கலந்துகொண்டார். அந்தப் போரில் இவருடைய காலில் குண்டடிபட்டதால் இவருடைய வாழ்க்கையே கேள்விக்குறியானது.
இவர் தன்னுடைய காலில் பட்ட குண்டை அகற்றுவதற்கு உரோமை நகரில் இருந்த சான் ஜியாகோமா என்ற மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவர் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார். அந்நாட்களில் இவருடைய நடத்தை சரியில்லாததால் இவர் வெளியே துரத்தப்பட்டார். அதனால் இவர் தெருவில் பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அப்போது கப்புச்சின் சபையைச் சார்ந்த ஒரு துறவி இவருடைய நிலையைப் பார்த்து, இவருக்கு தன்னுடைய துறவுமடத்தில் வேலை ஒன்றை போட்டுக்கொடுத்தார். அங்கே இவருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றம் காணப்பட்டது. இதன்பிறகு இவர் முன்பு தான் மருத்துவ உதவிகளைப் பெற்றுவந்த சான் ஜியோகோமோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவருடைய நடத்தையில் காணப்பட்ட நிறைய மாற்றங்களைக் கண்டு, இவரை அங்கேயே தங்கச் செய்தனர். அங்கு தன்னிலும் வறிய நிலையில் இருந்த நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்யத் தொடங்கினார்; அவர்களை நல்லவிதமாய் பராமரித்துக் கொண்டார். இதனால் இவருக்கு நல்ல நல்ல மதிப்பு உண்டானது.
இப்படி இவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் இவருக்கு தூய பிலிப்பு நெரியாரின் நட்பு கிடைத்தது. அவரை இவர் தன்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டு, நிறைய காரியங்களில் ஆலோசனை பெற்று வந்தார். ஒருகட்டத்தில் கமிலசுக்கு நோயாளிகளுக்காக சபை ஒன்றைத் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனை இவர் தன்னுடைய ஆன்ம குருவிடத்தில் சொன்னபோது, “நல்ல காரியம், விரைவாகத் தொடங்கு” என்றார். உடனே கமிலஸ் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள, The Clerks Regular of Good Death, Ministers to the Sick எனப்படும் கமிலியன் சபையைத் தோற்றுவித்தார். இந்த சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான்.
கமிலஸ் ஏற்படுத்திய சபையில் நிறையப் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தார். அவர்களுடைய ஒத்துழைப்பின் பேரில், நோயாளிகளைக் கவனித்துக் கொள்கின்ற பணியினை மிகச் சிறப்பான முறையில் செய்தார்.
இப்படி நோயாளிகள் நலம்பெற தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த கமிலஸ் 1614 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1746 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் சிங்கராயரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*
தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
*1. நோயாளிகளிடத்தில் அக்கறை*
தூய கமிலசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் நோயாளிகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. கமிலஸ் தன்னிடத்தில் வந்த நோயாளிகளை தன்னுடைய சகோதர சகோதரிகளைப் போன்று பார்த்து, அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்துவந்தார்.
தூய கமிலசைப் போன்று நாம் நோயாளிகளிடம் அக்கறையும் அன்பும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித் தீர்ப்பின் போது ஆண்டவர் இயேசு தனக்கு முன்பாகக் கூடியிருந்தவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி, “நான் நோயுற்றிருந்தேன் என்னை கவனித்துக் கொண்டாயா?” என்பதுதான். இந்த இறைவார்த்தை இயேசு ஒவ்வொரு நோயாளியிடமும் இருக்கின்றார், நோயாளியைக் கவனித்துக் கொள்ளும்போது நாம் இயேசுவையே கவனித்துக் கொள்கின்றோம் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
ஆகவே, தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடத்தில் இயேசுவைக் காண்போம், அவர்களுக்கு அன்போடும் கரிசனையோடும் சேவை செய்வோம்.
No comments:
Post a Comment