Saturday 22 February 2020

சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*


*“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*

*நிகழ்வு*

ஒருவர் ஒரு பெரிய கடை வைத்து வாணிபம் செய்துவந்தார். அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை கட்டி, அதில் தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு புனிதமான குருவின் படத்தை மாட்டி வைத்திருந்தார்.

எப்பொழுதெல்லாம் அவருக்குத் சோதனைகள் வந்தனவோ, குறிப்பாக தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான இலாபம் வைத்துப் பொருள்களை விற்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்த குருவானவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “சுவாமி! எனக்கு மிகப்பெரிய ஒரு சோதனை வந்திருக்கின்றது. இந்தச் சோதனையை என்னால் வெற்றிகொள்ளமுடியவில்லை. உங்களுடைய திருமுகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால் என்னால் சோதனையை வெற்றிக்கொள்ள முடியும். அதனால்தான் உங்களுடைய திருமுகத்தைக் காண இங்கு வந்திருக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் நியாயமான இலாபம் வைத்து விற்பார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடைக்காரர் தனக்கு வந்த சோதனையை தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த குருவானவரின் திருமுகத்தைப் பார்ப்பதன் மூலம் வெற்றிகொண்டார். நாம் நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளை ஆண்டவரின் திருமுகத்தை ஒருமுறை பார்த்தோமெனில் வெற்றிகொள்ளலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*கடவுள் யாரையும் சோதிப்பதில்லை*

ஒருசிலர் ‘கடவுள் என் வாழ்வில் சோதனைகளுக்கு மேல் சோதனைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். நாமும்கூட இவ்வார்த்தைகளைப் பலமுறை உச்சரித்திருப்போம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. “சோதனை கடவுளிடமிருந்தே வருகின்றது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை” என்கின்றார் புனித யாக்கோபு.. இவர் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நன்கு உணர்ந்துகொண்டோமென்றால், சோதனைகள் கடவுளிடமிருந்தே வருகின்றன என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்க மாட்டோம்.

*ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்*

சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை என்று சொன்ன புனித யாக்கோபு, அந்தச் சோதனைகள் எப்படி வருகின்றன என்ற தெளிவினையும் நமக்குத் தருகின்றார். ஆம். “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்” என்று கூறுவதன் மூலம், சோதனைகள் எப்படி வருகின்றன என்பதற்கான தெளிவினைப் புனித யாக்கோபு தருகின்றார். இந்த இடத்தில் ஒருவர் எப்படியெல்லாம் சோதனைக்கு ஆளாகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக சோதனைகள் எல்லாருக்கும் வரும். ஆண்டவர் இயேசுவுக்கே சோதனைகள் வந்தனவே! சோதனைக்கான விதையை ஆசை விதைக்கின்றது என்று சொல்லலாம். ஆசையால் நாம் ஏமாற்றப்படும்பொழுது, கடவுளின் கட்டளைகளை மீறுகின்றோம் அல்லது கீழ்ப்படியாமல் நடந்துகொள்கின்றோம். இதன்மூலம் நாம் சோதனைக்கு உட்பட்டு பாவம் செய்கின்றோம். இங்கு ஆதாமையும் ஏவாளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பாம்பின் பசப்பு மொழியால் ஆதாமின் மனைவியின் உள்ளத்தில் ஓர் ஆசை பிறக்கின்றது. அந்த ஆசை அவருக்கு ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்த, அவர் ஏமாந்துபோகின்றார். பின்னர் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றார். ஆகவே, ஏவாளின் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசையே அவரையும் ஆதமையும் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றும் ‘ஆசை அறுமின்’ என்று சொல்கின்றார்கள்.

*பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு*

ஒருவருக்கு வருகின்ற ஆசை அவரைச் சோதனையில் விழவைத்துப் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோம். இந்தப் பாவத்தினால் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு.” ஆம், நாம் நமக்கு வரும் சோதனைகளுக்கு உட்படும்போது சாவைத்தான் கூலியாகப் பெறுவோம். அதே நேரத்தில் நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்கிக்கொண்டால், பேறுபெற்றோர் ஆவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் பேறுபெற்றோராக மாற நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்

*சிந்தனை*

‘தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்’ (எபி 2: 18) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்குவோம். அதநேரத்தில் சோதனைகளை வெற்றிக்கொள்ள இறைவனின் அருளை வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

No comments:

Post a Comment