Wednesday, 31 July 2019

மனதார மன்னிப்போம்

*தொடக்க நூல் 49: 29-32; 50: 15-26*

*மனதார மன்னிப்போம்*

*நிகழ்வு*

ஒரு சமயம் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்  வத்திகானில் உள்ள தனது இல்லத்தின் பால்கனியிலிருந்து மக்கட்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரைக் கொல்வதற்காக மக்களோடு மக்களாக வந்திருந்த கயவன் ஒருவன் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியால் திருத்தந்தை அவர்களைக் குறிபார்த்துச் சுடத் தொடங்கினான். ஆனால், அவன் வைத்த குறி கொஞ்சம் பிசகிவிட திருத்தந்தை எப்படியோ அதிலிருந்து தப்பித்தார்.

இதைத் தொடர்ந்து திருத்தந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளிகள், திருத்தந்தையைச் சுடமுயன்ற அந்தக் கயவனை ஓடிச்சென்று பிடித்தார்கள். பின்னர் அவனைச் சிறையில் அடைத்துக் காவல்காத்து வந்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து திருத்தந்தை அவர்கள் தன்னைக் கொல்ல முயன்றவனைப் பார்க்கச் சென்றார். அவனோ திருத்தந்தையின் காலில் விழுந்து, தன்னை மனதார மன்னிக்குமாறு கேட்டான். திருத்தந்தையும் அவனை மனதார மன்னித்தார்.

பின்னர் அவர் அவனிடம் சிரித்துக்கொண்டே, “நீ நான் இறையாசி வழங்கிய கூட்டத்தில் ஒருவனாக இருந்ததால்தான் உன்னால் என்னைக் குறிபார்த்துச் சுட முடியவில்லை... நான் வழங்கிய இறையாசி உன்னைச் சரியாகக் குறிபார்க்க விடாமல் செய்திருக்கும். அடுத்தமுறை நீ என்னைச் சுட நினைத்தால், தனியாக இருந்துகொண்டு என்னைச் சுட முயற்சி செய். அப்பொழுது உன்னால் என்னைச் சரியாகக் குறிவைத்துச் சுட முடியும்” என்றார். தொடர்ந்து அவர் அவனிடம், “நீ என்னைச் சுடமுயன்ற செய்தி உன் வீட்டில் இருக்கின்ற எல்லார்க்கும் எப்படியும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை நினைத்து மிகவும் வருந்திக்கொண்டிருப்பார்கள். அதனால் நீ உடனடியாக வீட்டிற்குச் சென்று, ‘திருத்தந்தை என்னை மனதார மன்னித்துவிட்டார்’ எனச் சொல்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று, திருத்தந்தை தன்னிடம் கூறியவற்றை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வருத்தத்தைப் போக்கினான். 

தன்னைக் கொள்ள முயன்றவனையும் திருத்தந்தை மனதார மன்னித்த இச்செய்தி அந்நாட்களில் பத்திரிகைகளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் திருத்தந்தை எப்படி தன்னைக் கொல்லமுயன்றவனை மனதார மன்னித்தாரோ அப்படியே இன்றைய முதல் வாசகத்தில் தன்னைக் கொல்ல முயன்ற தன் சகோதரர்களை யோசேப்பு மனதார மன்னிக்கின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*குற்றப்பழியோடு இருந்தவர்களை மனதார மன்னித்த யோசேப்பு*

முதல் வாசகத்தில், யாக்கோபு இறந்ததும் அவருடைய பத்துப் புதல்வர்களும், தாங்கள் யோசேப்புக்கு எதிராகத் தவறு செய்ததற்கு அவன் தங்களைப் பழி வாங்குவான் என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அது மட்டுமல்லாமல், யாக்கோபு இறப்பதற்கு முன்னம், தாங்கள் செய்த தவறுகளை எல்லாம் யோசேப்பு மன்னிக்கவேண்டும் என்றும் அவர் அவனிடம் கூறச் சொன்னதாகச் சொல்கின்றார்கள். இதைக் கேட்டு யோசேப்பு கண்ணீர் விட்டு அழுகின்றார்.

யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த குற்றத்தை ஏற்கனவே மன்னித்திருந்தார் (தொநூ 45: 5). அப்படியிருந்தும் அவர்கள் அதை நம்பமால், தன் சகோதரன் தங்களை முழுமையாக மன்னிக்கவில்லை என்ற குற்றவுணர்வோடே இருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் தங்களுடைய தந்தையின் இறப்பிற்குப் பின் யோசேப்பு தங்களைப் பழிவாங்குவார் என்று நினைக்கின்றார்கள். இந்நிலையில்தான் யோசேப்பு அவர்களை மனதார மன்னித்து, அவர்களை அவர்களுடைய குற்றவுணர்விலிருந்து வெளியே வரச் செய்கின்றார்.

*தீமையில் நன்மை இருப்பதாக எடுத்துச் சொன்ன யோசேப்பு*

யோசேப்பை அவர்களுடைய சகோதரர்கள் பத்துப் பேரும் சேர்ந்து கொல்ல முயன்றார்கள். ஆனால், அவர்களுள் ஒருவன், அவனைக் கொல்லவேண்டும்... விற்றுவிடுவோம் என்று சொல்ல, அதுபோன்றே செய்தார்கள். இது ஒருபுறத்தில் மிகப்பெரிய குற்றமாக இருந்தாலும், இதன்மூலம் கடவுள் யோசேப்பை எகிப்து நாட்டின் ஆளுநராக உயர்த்தி, பஞ்சக் காலத்தில் அவர்கட்கு உணவிடுமாறு செய்கின்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும்பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்” என்று கூறுகின்றார். 

ஆகையால், நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்ற சில எதிர்பாராத சம்பவங்களை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல், அதைத் இறைத்திருவுளமென ஏற்று, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்வோம். 

*சிந்தனை*

‘ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்’ (கொலோ 3:13) என்பார் பவுல். ஆகையால், யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்து போல, ஆண்டவர் நம்மை மன்னித்தது போல், நாமும் ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     

 
*"GOD IS LOVE"* 

No comments:

Post a Comment