Tuesday 9 May 2017

வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.



பிடிவாதம் கொண்ட சிறுமி
 ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

 ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

 அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.

 கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள்.

 அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லாரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார்.

 அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும் என்றாள்.

 ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால்.

 கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா.

நீதி :
வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


No comments:

Post a Comment