*யோவேல் 3: 12-21*
*“குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்”*
*நிகழ்வு*
துறவி ஒருவர் இருந்தார். அவர் ஊருக்கு நடுவில் இருந்த ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு, மக்கட்கு பல நல்ல செய்திகளைச் சொல்லிக்கொண்டு வந்தார். அவரை அவ்வூரில் இருந்த எல்லார்க்கும் பிடித்தது. ஒரே ஒரு பெண்மணியைத் தவிர. அதற்குக் காரணம், அப்பெண்மணி செய்துவந்த தவறுகளை இவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார். அதனால்தான் அந்தப் பெண்மணிக்கு இவரைப் பிடிக்காமல் போனது.
அந்தப் பெண்மணி துறவியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினாள். அதனால் அவள் அறுசுவை உணவு தயாரித்து அதை ஒரு தூக்குவாளியில் வைத்து, துறவியிடம் கொண்டு போய்க்கொண்டுத்தாள். “சுவாமி! நீங்கள் சொன்னதெல்லாம் என்னுடைய நன்மைக்காகத்தான் என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தேன். அதனால் நான் மனம்திரும்பிவிட்டேன். என்னுடைய மனமாற்றத்தின் அடையாளமாக இந்த அறுசுவை உணவை உங்கட்குத் தயாரித்துக் கொண்டுவந்திருக்கின்றேன். தயவுசெய்து இதைச் சாப்பிடுங்கள்” என்றாள்.
அவள் சொன்னதெல்லாம் உண்மையென நம்பி துறவி அவளிடம், “சரிம்மா! நீ அன்போடு தயாரித்துக் கொண்டுவந்திருக்கின்ற இந்த உணவைச் சாப்பிடுகிறேன். ஆனால், இப்பொழுது என்னால் சாப்பிட முடியாது; இன்று நான் திருப்பயணம் மேற்கொள்கின்றேன். அதனால் நான் போகும்வழியில் சாப்பிட்டுக் கொள்கின்றேன்” என்றாள். அந்தப் பெண்மணியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
இதற்குப் பின்பு துறவி அந்தப் பெண்மணி கொடுத்த அறுசுவை உணவு இருந்த தூக்கிவாளியை ஒரு கையிலும் பயணத்திற்குத் தேவையான பொருள்களை இன்னொரு கையிலும் தூக்கிக்கொண்டு திருப்பயணம் மேற்கொண்டார். வழியில் ஒரு மரத்தடியில் இரண்டு இளைஞர்கள் களைப்பாக அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே அவர் அவர்களருகில் சென்று, “தம்பிகளா! உங்களைப் பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக இருப்பது போன்று தெரிகின்றது. என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கின்றது. அதைச் சாப்பிடுகிறீர்களா...?” என்று கேட்டார். அவர்கள் ஆம் என்பதுபோல் தலையாட்டினார்கள். பின்னர் அவர் தான் கொண்டு வநதிருந்த தூக்குவாளியைத் திறந்து அதிலிருந்த உணவை அவர்கட்குச் சாப்பிடக் கொடுத்தார். அவர்கள் வயிறார உண்டார்கள். அவர்களோடு அவர் பேசுகையில்தான் தெரிந்தது, அவர்கள் இருவரும் பட்டணத்தில் வேலைபார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதும், எந்தப் பெண்மணி தனக்கு உணவு சமைத்துக் கொடுத்தாளோ, அந்தப் பெண்மணியின் இரு மகன்கள் என்பதும்.
தொடர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த இரண்டு இளைஞர்களும் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து இறந்துபோனார்கள். அவரோ ஒன்றும் புரியாமல் திகைத்துநின்றார். அந்நேரத்தில் அங்கு வந்து ஒருசிலர் துறவிதான் அந்த இரண்டு இளைஞர்களைக் கொன்றுபோட்டுவிட்டார் என்று அவரை ஊரில் இருந்த நடுவரிடம் இழுத்துக்கொண்டு போனார்கள்.
நடுவர் அவரை விசாரிக்கையில் துறவி, அந்த உணவை, தான் தயாரிக்கவில்லை என்றும் அந்த இரண்டு இளைஞர்களுடைய தாய்தான் தனக்குத் தயாரித்துக் கொடுத்தார் என்றும் உண்மையை உரக்கச் சொன்னார். இதனால் நடுவர், துறவியை நஞ்சு அல்லது விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அந்த இரண்டு இளைஞர்களின் தாயைச் சிறையில் அடைத்தார். அந்தப் பெண்மணியோம ‘துறவிக்குக் கெடுதல் செய்யப்போய் நமக்கே அது வினையாகிவிட்டதே! என்று நினைத்துக் காலமெல்லாம் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.
தீமையை விதைத்தால், தீமையைத்தான் அறுவடை செய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களை அழித்தொழிக்க முயன்ற வேற்றினத்தார்க்கு எத்தகைய தண்டனை கிடைக்கப் போகிறது என்பதை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
*தீர்ப்பு வழங்கக் காத்திருக்கும் இறைவன்*
இஸ்ரேயலின் மீது படையெடுத்து வந்த ஆசிரியர்கள், இஸ்ரயேலில் இருந்த தீயவர்களை மட்டுமல்லாது குற்றமற்றவர்களுடைய இரத்தத்தையும் சிந்தினீர்கள். இதனால் ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தண்டியாது விடேன்; அவர்கட்குத் தீர்ப்பு வழங்குவேன் என்று சொல்வதாக இருக்கின்றது இன்றைய முதல் வாசகம். குற்றமற்றவர்களைக் கொடுமைப்படுத்திய வேற்றினத்தாரைப் போன்று நாமும் குற்றமற்றவர்களைக் கொடுமைப் படுத்தினால், அதற்கான தண்டனையைப் பெறுவோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
*இஸ்ரேயல் மக்கட்குப் புகலிடமாக இருக்கும் இறைவன்*
ஆண்டவராகிய கடவுள் தீயவர்களைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வதுடன், அவருடைய மக்களாகிய இஸ்ரயேலுக்கு புகலிடமாக இருக்கப் போவதாகவும் அவர்கட்குக் கடவுளாக இருந்து, எல்லா நலன்களையும் அளிக்கப் போவதாகவும் இறைவாக்கினர் யோவேல் வழியாக எடுத்துக் கூறுகின்றார். நாமும் கடவுளுடைய மக்களாக இருக்கின்றபோது, அவருடைய வழியில் நடக்கின்றபோது, அவர் நமக்கு எல்லா நலன்களையும் தருவார் என்பது உறுதி.
*சிந்தனை*
‘உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள்’ (எரே 26: 13) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் நம்மிடமிருந்து தீமையைத் தவிர்த்துவிட்டு, ஆண்டவரின் சொல்லுக்குச் செவி சாய்ந்து, அவருடைய அன்பு மக்களாகி மாறி, அவருடைய அருளை நிறைவாகப் பெறுவோம்.
*மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
*"GOD IS LOVE"*