*கடவுளின் பிள்ளைகளும் அலகையின் பிள்ளைகளும்*
*நிகழ்வு*
ஒரு நாட்டில் இளம்பெண் ஒருவர் இருந்தார். அவர் அந்நாட்டில் இருந்த அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் இளவரசருக்குத் தாமதமாகத் தேநீர் கொடுத்துவிட்டார் என்பதற்காக அவர் அந்த இளம்பெண்ணிடம், “நான் யாரென்று தெரியுமா...? இந்நாட்டு அரசருடைய மகன்... அதனால் நீ என்னிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்” என்று சொல்லி மிரட்டி வந்தார்.
‘தன்மீது தவறு இருக்கின்றது... அதனால் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும்’ என்றிருந்த அந்த இளம்பெண்ணிடம், இளவரசர் மீண்டும் மீண்டுமாக அதே சொற்களைச் சொல்லி எச்சரித்து வந்ததால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த இளம்பெண், “நீங்கள் வேண்டுமானால், இந்த நாட்டு அரசருக்கு மகனாக இருக்கலாம்; ஆனால் நான் அந்த அகிலத்தையே படைத்துக் காத்துவரும் ஆண்டவருடைய மகள். அதனால் நீங்கள் என்னிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்று உறுதியாகச் சொன்னார். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத இளவரசர் வாயடைத்து நின்றார்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் இந்த அகிலத்தைப் படைத்துக் காத்துவரும் ஆண்டவருடைய மகன்/மகள். இன்றைய முதல் வாசகமானது ஆண்டவரின் மகன் யார்? அலகையின் மகன் யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
*யாரெல்லாம் அலகையின் பிள்ளைகள்?*
திருத்தூதரான புனித யோவான், தன்னுடைய முதல் திருமுகத்தில், யாரெல்லாம் அலகையின் பிள்ளைகள்... யாரெல்லாம் ஆண்டவரின் பிள்ளைகள்... என்பதைத் தொடர்ந்து வேறுபடுத்திக் காட்டி வருகிறார். இன்றைய முதல் வாசகத்திலும் அது தொடர்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், யாரெல்லாம் அலகையின் பிள்ளைகள் என்று அவர் குறிப்பிடுகின்றபொழுது, பாவம் செய்கிற யாவரும் அலகையின் பிள்ளைகள் என்று குறிப்பிடுவார். தொடர்ந்து அவர் பாவம் எது என்று குறிப்பிடும் பொழுது, நேர்மையின்றி நடப்பது... தன்னுடைய சகோதரர் சகோதரிகளை வெறுப்பது இவையாவும் பாவம் என்று குறிப்பிடுவார். ஆம் தன்னுடைய வாழ்வில் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிக்காதவரும், தன் சகோதரர், சகோதரியை வெறுப்பவரும் அலகையின் பிள்ளைகளாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில், அலகைதான் இதுபோன்ற செயல்களைச் செய்யும்.
யோவான் நற்செய்தி, எட்டாம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வு. இயேசு கிறிஸ்து தான் கடவுளிடமிருந்து வந்தவர் என்று சொல்கின்றபொழுது, யூதர்கள் அவரை நம்ப மாட்டார்கள். அதனால் இயேசு அவர்களைப் பார்த்து, “சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்” (யோவா 8: 44) என்பார். ஆம், யூதர்கள் இயேசுவின்மீது எப்பொழுதும் வெறுப்போடும் நேர்மையின்றியும் செயல்பட்டார்கள். அதனால்தான் இயேசு அவர்களைப் பார்த்து சாத்தான்தான் உங்களுக்குத் தந்தை என்று கூறுகின்கின்றார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் போன்று உள்ளத்தில் வெறுப்போடும் நேர்மையின்றியும் செயல்பட்டால், நாமும் சாத்தானின் மக்களாகவே இருப்போம் என்பது உறுதி.
*யாரெல்லாம் கடவுளின் பிள்ளைகள்*
அலகையின் பிள்ளைகள் யார்? அவர்களுடைய செயல்கள் எப்படி இருக்கும்? என்பது பற்றிப் பேசிய யோவான், கடவுளின் பிள்ளைகள் யார்? அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசுகின்றார்.
கடவுளின் பிள்ளைகள் அல்லது கடவுளிடமிருந்து வந்தவர்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், கடவுளிடமிருந்து வந்தவர்கள் நேர்மையோடு செயல்படுபவர்களாகவும் ஒருவர் மற்றவரை அன்பு செய்பவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் அன்பு அதிகமாக இருக்கும். இக்கருத்தினை புனித யோவான் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.
யோவான் சொல்லக்கூடிய இந்தச் செய்தியை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, லூக்கா நற்செய்தி ஏழாம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வினை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு பரிசேயரான சீமோனின் வீட்டிற்கு உணவருந்தச் செல்லும்பொழுது, இயேசுவின் காலடிகளை பெண்ணொருத்தி கழுவுவதைப் பார்த்துவிட்டு, அவரை விருந்துக்கு அழைத்திருந்த சீமோன் முணுமுணுப்பதைக் கேட்டுவிட்டு இயேசு அவரிடம், “இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். அதனால் இவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” (லூக் 7: 47) என்று கூறுவார். அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது என்பதுதான் இயேசு இங்கு கூறுகின்ற செய்தியாக இருக்கின்றது. புனித யோவானும் இதைத்தான் பாவம் செய்யாதவர் அல்லது அன்பினை மிகுதியாகக் கொண்டிருப்பவர் கடவுளிடமிருந்து வந்தவர் என்று கூறுகின்றார்.
ஆதலால் நாம் ஒருவர் மற்றவரை மிகுதியாக அன்பு செய்து, கடவுளின் அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம்.
*சிந்தனை*
‘ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாக இருக்கட்டும்’ (உரோ 13: 8) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வது ஒருவருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நாம் செலுத்தவேண்டிய கடனாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாகி, அவருடைய அருளை நிறைவாகப்
.
No comments:
Post a Comment