*“எனக்குப் பின் வரும் அவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்”*
*நிகழ்வு*
அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த ஒருசிலர் கோயில் தொடர்பானவற்றில் முக்கிய பொறுப்புகளை வகிக்கவேண்டும் என்று ‘அடித்துக்கொண்டார்கள்’. இது அங்கிருந்த பங்குத்தந்தைக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருநாள் நற்செய்தி வாசகமாக, இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவது பற்றி வந்தது. இது பற்றி மறையுரையாற்றத் தொடங்கிய பங்குத்தந்தை, “இங்கிருக்கும் பலர் மற்றவர்களைவிட தாங்கள் முன்னுரிமை பெறவேண்டும்; முக்கியப் பொறுப்புகளை வகிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவைப் போன்று தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு முக்கியம் கொடுத்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்” என்றார். இதைக் கேட்டு, முக்கியப் பொறுப்புகளுக்கு ‘அடித்துக்கொண்டவர்கள்’ யாவரும் தங்களுடைய வாழ்க்கையை தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்க்கத் தொடங்கினார்கள்.
மேலே உள்ள நிகழ்வு சொல்வதுபோல இன்று பலர் மற்றவர்களைவிடத் தாங்கள் முக்கியத்துவம் பெறவேண்டும்.... மற்றவர்களைவிட தாங்கள் அதிகமான முன்னுரிமை பெறவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், தலைவன் இயேசுவை முன்னிலைப்படுத்திப் பணிசெய்த திருமுழுக்கு யோவானைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் செய்த பணி என்ன? அந்தப் பணியினை அவர் எத்தகைய மனநிலையோடு செய்தார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
*தன்னை முன்னிலைப்படுத்தாத திருமுழுக்கு யோவான்*
நற்செய்தியில், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று சொல்லிவிட்டு, “எனக்குப் பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார்” என்கின்றார்.
திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கைகொண்டு (லூக் 1: 17) மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்தார். மெசியாவாம் இயேசு வந்தபின் அவரை, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று சுட்டிக்காட்டினார். இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்னவெனில், இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் சொல்வதாக இடம்பெறுகின்ற, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” என்பதுதான். திருமுழுக்கு யோவான், தான் யார் என்பதை முற்றிலுமாக உணர்ந்திருந்தார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், திருமுழுக்கு யோவான் தான் மெசியா அல்ல; மெசியாவைக் குறித்து சான்று பகரவந்தவன் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர் மேலே உள்ள வார்த்தைகளை உச்சரித்தார். இன்று, நாம் யார்? நாம் எப்படி இருக்கவேண்டும்? என்பதை அறிந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
*பிறர் உங்களைவிட மதிப்புக்குரியரென எண்ணுங்கள்*
புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இவ்வாறு கூறுவார்; “பிறர் உங்களைவிட மதிப்புக்குரியரென எண்ணுங்கள்.” (உரோ 12: 10). பவுலின் இவ்வார்த்தைகள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.
பவுல் சொல்வதுபோன்று, பிறர் நம்மைவிட மதிப்புக்குரியவர் என நாம் எண்ணுவதற்கு முதலில் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அப்படி நாம் மற்றவர் நம்மைவிட மதிப்புக்குரியவர் என எண்ணத் தொடங்கினால், நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கமாட்டோம். திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவை, மற்றவரைத்தான் முன்னிலைப்படுத்திக்கொண்டிருப்போம். இதற்கு நமக்கு அவசியமாக இருக்கவேண்டிய பண்பு தாழ்ச்சி. உள்ளத்தில் தாழ்ச்சியோடு இருக்கின்ற ஒருவரால்தான் தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்றவரை முன்னிலைப்படுத்த முடியும்; மற்றவரை மதிப்புக்குரியவராக எண்ணவும் முடியும்.
இந்த இடத்தில் ஐசக் நியூட்டனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வினையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஒருமுறை நியூட்டனிடம் வந்த ஒருவர் அவரை யாரும் செய்யாத சாதனையைச் செய்துவிட்டதாக வானளாவப் புகழ்ந்து பேசினார். அவர் பேசி முடித்ததும், நியூட்டன் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: “மற்றவர் என்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்று தெரியவில்லை; ஆனால், நான் பரந்துவிரிந்து கிடக்கும் கடலுக்கு முன்னால் கிளிஞ்சல்களைப் பொறுக்குகின்ற ஒரு சாதாரண சிறுவன்.”
நியூட்டன் தன்னை எல்லாம் தெரிந்தவராக, எல்லாரையும்விடப் பெரியவரகக் காட்டிக்கொள்ளவில்லை. சாதாரண ஒரு மனிதராகவே எண்ணினார். நாமும் நம்மைப் பெரியவர்களாக, மதிப்புக்குரியவர்களாக எண்ணிக்கொள்ளாமல், மற்றவர்களை மதிப்பிற்குரியவர்களாக எண்ணுவோம். அப்பொழுது நல்லதையே அருளும் ஆண்டவர் நமக்கு நல்லதைச் செய்வார்.
*சிந்தனை*
‘ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துகள்; அவர்கள் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று, ஆண்டவருக்கு முன்பு நம்மைத் தாழ்த்தி, பிறரை நம்மைவிட மதிப்புக்குரியவர்கள் என எண்ணி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
No comments:
Post a Comment