இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார் ( 2 மக் 7: 29).
*வாழ்க்கை வரலாறு*
இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமையில் பெலிசித்தா பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் திருமணம் முடித்து தன்னுடைய கணவரோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அதன் வெளிப்பாடாக இறைவன் இவருக்கு ஏழு பிள்ளைகளைக் கொடையாகக் கொடுத்தார். இப்படி வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருக்கும்போது, திடிரென்று இவருடைய கணவர் இறந்துபோனார். அப்போது இவர் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. இருந்தாலும் கடவுள்மீது இவர்கொண்ட நம்பிக்கை இவருக்கு வலுவூட்டியது.
இவர் தன்னுடைய பிள்ளைகளை பக்தி நெறியில் வளர்த்து வந்தார். இது மட்டுமல்லாமல், இவர் தான் வாழ்ந்து வந்த பகுதியில் மிகச் சிறந்த நற்செய்திப் பணியாளராக வாழ்ந்து வந்தார். ஆண்டவர் இயேசுவைப் பற்றி இவர் அறிவித்து வந்த நற்செய்தியும் இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையும் பலரையும் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவந்து சேர்த்தது.
இச்செய்தி எப்படியோ உரோமை மன்னன் அந்தோனினுஸின் செவிகளை எட்ட, அவன், பெலிசித்தாவையும் அவருடைய ஏழு புதல்வர்களையும் தன் முன்னே கொண்டுவர தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய உத்தரவின் பேரில் பெலிசித்தாவும் அவருடைய ஏழு புதல்வர்களும் இழுத்துவரப் பட்டார்கள். அப்போது மன்னன் பெலிசித்தாவைப் பார்த்து, “நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உரோமைக் கடவுளுக்குப் பலிசெலுத்தினாயானால் உன்னையும் உன்னுடைய பிள்ளைகளையும் அப்படியே விட்டுவிடுவேன், இல்லையென்றால் உங்கள் அனைவரையும் கொன்றுபோட்டுவிடுவேன்” என்றான். அதற்கு பெலிசித்தா அவனைப் பார்த்து, “நான் என் ஆண்டவர் இயேசுவைத் தவிர, வேறு யாரையும் வணங்கமாட்டேன், அவர்களுக்குப் பலிசெலுத்தவும் மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
இதைக் கேட்டு சினமடைந்த ஆளுநன் பப்ளியுஸ் பெலிசித்தாவிடம், “இயேசுவுக்காக நீ இறப்பது சரி, எதற்காக உன் ஏழு புதல்வர்களையும் கொல்லப்பார்க்கிறாய்” என்றார். உடனே பெலிசித்தா தன் ஏழு புதல்வர்களிடம், “என் அன்புச் செல்வங்களே, நீங்கள் ஆண்டவருக்காக உயிர்துறந்தால், அவருடைய விண்ணக மகிமையில் கலந்துகொள்வீர்கள்” என்றார். இதைக் கேட்ட அவருடைய ஏழு புதல்வர்களும், “நாங்கள் அனைவரும் ஆண்டவருக்காக உயிர்துறப்போமே ஒழிய, அவரை ஒருபோதும் மறுதலிக்க மாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார்கள்.
இதனால் இன்னும் சினமடைந்த ஆளுநன், பெலிசித்தாவின் ஏழு புதல்வர்களையும் அவருடைய கண்முன்பாகவே தலைவெட்டிக் கொன்றான். பின்னர் அவன் பெலிசித்தாவையும் அதேபோல் கொன்றான். இவ்வாறு பெலிசித்தாவும் அவருடைய ஏழு புதல்வர்களும் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி, தங்கள் இன்னுயிரைத் துறந்தார்கள்.
*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*
தூய பெலிசித்தா மற்றும் அவருடைய ஏழு புதல்வர்களின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
*1. நம்பிக்கையில் உறுதியாய் இருத்தல்*
தூய பெலிசித்தாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய உறுதியான நம்பிக்கையும் அதன்பொருட்டு அவர் ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய பெலிசித்தாவைப் போன்று, நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு கிறிஸ்தவர்களாய் வாழ்வதும் கிறிஸ்துவின் போதனையை மற்ற மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் சற்று சுலபமான காரியம்தான். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்படி கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று தெரிந்தாலோ அல்லது கிறிஸ்துவின் போதனையை மக்களுக்கு அறிவிக்கின்றோம் என்று தெரிந்தாலோ உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலில்கூட, தூய பெலிசித்தா ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, அவர் பொருட்டு தன்னுடைய உயிரைத்தர முன்வந்ததை நினைத்துப் பார்க்கின்றபோது, அவர் கிறிஸ்துவின் மீது எத்துணை உயர்வான நம்பிக்கை கொண்டிருந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்க முடிகின்றது. இன்றைக்கு நமது நம்பிக்கை வாழ்வில் சாதாரண ஒரு துன்பம் வந்தாலே பின்வாங்குகின்றோம். ஆனால், பெலிசித்தா இறுதிவரைக்கும் மனவுறுதியோடு இருந்தார்.
ஆகவே, தூய பெலிசித்தாவைப் போன்று அவருடைய ஏழு புதல்வர்களைப் போன்று, நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
No comments:
Post a Comment