சி ரியத் தலைநகர் டமாஸ்கசில் இருந்து படகு ஒன்று துருக்கி நோக்கி நம்பிக்கையுடன் புறப்படுகிறது.
படகில் 20 பேர் இருக்கின்றனர்.
தாய்நாட்டைப் பிரிந்து செல்லும் சோகம் அவர்கள் முகத்தில் அப்பிக் கிடக்கிறது.
சிரியாவில் தொடர்ந்து வசித்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
வாழ்வியல் ஆதாரமும் கிடையாது.
படகில் ஏறுவதும் மரணத்தை தழுவிக் கொள்வதற்கு சமம்தான்.
ஆயினும் துணிந்து கிளம்பி விட்டனர்.
மத்திய தரைக்கடலின் ஆழமான பகுதிகளை, ஓங்கி எழுந்த அலைகளையெல்லாம் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது படகு.
இரவு பகலாக பயணித்த படகில் இருப்பவர்களின் கண்களுக்கு, தொலைவில் ஒரு கரை தெரிகிறது.
படகில் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் சில மணி நேர பயணத்தில் ஏதோ ஒரு ஐரோப்பிய கடற்கரையைத் தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கை.
ஒருவரையொருவர் தழுவிக் கொள்கின்றனர்.
அந்த சந்தோஷம் கண நேரம் கூட நீடிக்கவில்லை.
ஓடிக் கொண்டிருந்த என்ஜின் திடீரென்று நின்றது.
படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்குவது போன்ற உணர்வு.
அனைவரும் பயத்தில் அலறுகின்றனர். குழந்தைகள் கதறுகின்றனர்.
படகில் எடை குறைந்தால்தான் படகு மூழ்குவதை தடுக்க முடியும்.
படகில் இருந்த யூஸ்ரா மெர்டினி, என்ற பெண் முதலில் கடலில் குதிக்கிறார்.
அவரது சகோதரி சாராவும் கடலில் இறங்க, இருவரும் படகை இழுத்துக் கொண்டு நீச்சல் அடிக்கத் தொடங்குகின்றனர்.
இருவரது முயற்சியில் படகு கரையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு படகு ஒரு தீவில் கரை ஒதுங்குகிறது.
கரையிறங்கிய அனைவரும் யூஸ்ராவை கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர்.
யூஸ்ராவின் துணிச்சலால் படகில் இருந்த 20 பேரும் உயிர் பிழைத்துக் கொண்டனர்.
பத்தொன்பது பேரின் உயிரை காப்பாற்றிய யூஸ்ரா, சாதாரண பெண் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். சிரிய நாட்டின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனைகளுள் ஒருவர்.
அதனால்தான் ஆபத்து நேரத்தில் தைரியமாக அவரால் கடலுக்குள் குதிக்க முடிந்தது.
தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் யூஸ்ரா, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போகிறார்.
ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக 'நாடிழந்தவர்கள் அணி ' பங்கேற்கிறது.
'ரெஃப்யூஜி டீம்' என அழைக்கப்படும் இந்த அணியில் 10 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள்.
அதில் ஒருவர் யூஸ்ரா.
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் பங்கேற்கும் யூஸ்ரா, உயிர் பிழைத்த 'திகில்' அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
''கடலில் குதித்த போது, ஒரு விஷயம் என்னிடம் தெளிவாக இருந்தது.
ஒன்று உயிர் பிழைப்பது அல்லது சாவது.
எனது சகோதரி சாரா என்னை முதலில் தடுத்தாள்.
படகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய முடியாது. நாம் நீச்சல் அடித்து கரைக்கு போய் விடுவோம் என்றாள்.
ஆனால் இந்த விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன்.
படகில் இருந்தவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை.
எங்கள் இருவருக்கும் மட்டுமே நீச்சல் தெரிந்திருந்தது.
உயிர் பயத்தில் தவிப்பவர்களை விட்டு விட்டு, நாம் மட்டும் தப்பிப்பதா என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
நான் மட்டும் நீந்தி கரைக்கு வந்திருந்தால், எனது மீதி வாழ் நாட்களில் அந்த அழுத்தத்தாலேயே தினம் தினம் செத்து கொண்டிருப்பேன்.
எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம். செத்தால் மொத்தமாக சாவோம். பிழைத்தால் ஒட்டுமொத்தமாக வாழ்வோம் என்ற எண்ணத்தில் முதலில் நான் கடலில் குதித்தேன்.
சாராவுக்கும் நன்றாக நீச்சல் தெரியும். அவளும் கடலில் குதித்தாள்.
தொடர்ந்து படகை பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தோம்.
உடல் சோர்வடைந்தது.
ஏதேச்சையாக கிரீஸ் நாட்டுக்கு சொந்தமானத் தீவில் கரை ஒதுங்கினோம்.
வாழ்க்கை போராட்டத்திற்கான நீச்சல் அது''
எனக் கூறும் யூஸ்ராவுக்கு, ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு கதவைத் திறந்து விட வேண்டும்; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும்; சொந்த ஊரான டமாஸ்கசில் அமைதி திரும்ப வேண்டுமென்ற மூன்று கனவுகள் இருக்கின்றன.
Sunday, 7 August 2016
ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக 'நாடிழந்தவர்கள் அணி ' பங்கேற்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment