Tuesday, 23 July 2024

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்ன?

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்ன?

1.இரவு வீடு திரும்பியவுடன் கை காலை கழுவிட்டு காலாகாலத்துல சாப்பிட்டு முடித்துவிட்டு சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்.(எங்களுக்கு தூக்கம் கண்ணை கட்டுவதை புரிஞ்சிக்கணும்)

2. 30 நாளைக்கு நீங்க வாங்கி போட்ட சமையல்சாமான்கள் எல்லாம் இந்த மாதம் 20 நாளிலேயே முடிந்து விட்டது. (விருந்தாளி வருகையினால்) வீட்டில் என்ன இருக்கிறது? இல்லை? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளனும்.

3. நீங்க_காலையில் வேலைக்கு போகும் போது கால் வலிக்குது என்று சொன்னேனே? இப்போது வலி எப்படி இருக்கிறது என்று விசாரிக்கனும்.

4.ஏய்.. வரும் வழியில் உங்க அண்ணனை பார்த்தேன். வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பிள்ளைக்கு வளைகாப்பாம். விசேஷத்துக்கு சொல்ல நாளைக்கு வருவாரு. அதை உனக்கு சொல்லச் சொன்னாரு. என்று தினசரி நிகழ்வுகளை சிரித்த முகத்தோடு பேசணும்.

5. ஏங்க.. பெரியவனை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுறான். என்றால்.. அவனைப் பத்தி நீ ஏன் கவலைப் படுற? எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்லனும்.

6. இன்னைக்கு என்ன சமைக்கட்டும் என்று கேட்டால்..யம்மா; மதியத்திற்கு மட்டும்-உன்னால் சுலபமாக எதை செய்ய முடிகிறதோ அதை செய்தால் போதும். நைட் வரும்போது கொத்து புரோட்டா வாங்கி வருகிறேன். நாம எல்லாரும் ஜாலியா சாப்பிடலாம். என்று சொல்லணும்.

7. இன்று என்ன உனக்கு முகம் டல்லா இருக்கு? மனசு என்னவும் சரி இல்லையா? அப்படியே மெதுவா செட்டியார் கடை வரை பேசிக்கிட்டே..நடந்து போய்-வீட்டுக்கு தேவையானது ஏதாவது வாங்கி வருவோம் வா. என்று முதுகை தட்டி கொடுத்து பேசணும்.

8. அங்க இங்க கிடக்குற பணத்தை எல்லாம் ஒண்ணா சேர்த்து எண்ணிப் பார்த்தேன். Tow Lana தேறும். அதை என்ன செய்யலாம் சொல்லு. என்று கேட்கணும்.

9. நேத்து யூடியூபில் புதிய-டிஸ் ;ஒன்று பார்த்தேன். என்னவோ சப்பாத்தியை கல்லிலே லேசாக வழக்கம்போல் எண்ணையைத் தடவி பாதி சுட்ட பிறகு எடுத்து அதை நெருப்பில் மறுபடி சுட்டு எடுக்கணுமாம். அதன் பெயர் என்னவோ புட்லா என்று சொன்னார்கள். இன்று உனக்கு நைட் டிபன் அதுதான். நானே செய்யப் போகிறேன். என்று சொல்லனும்.

10. ஆடியோவில்.. எங்க வீட்டு ராணிகிப்போ இளமை திரும்புது. வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது_என்று பாட்டை போட்டு கேட்டு ரசிக்கணும்.
மற்றபடி.. அவங்களுக்கு தேவையான திங்ஸ்..சேரீஸ்.. கை செலவுக்கு கொஞ்சம் பணம்.. இதெல்லாம் நாங்க கேட்காமலே கொடுத்திறனும்.

முடிந்தால் அவ்வப்போது.. வடிவேலு போன்று பல உருட்டுகளாக காமடி பண்ணனும்..!

இதெல்லாம் எந்த வீட்டுல நடக்குது?? சந்தையிலே (திருமணம்) ஏலத்துக்கு எடுத்து, சாவடியிலே (அடுப்படி) குத்தகைக்கு விட்டு, எங்களைமொத்தமாக விலைக்கு வாங்கியது போல.. வெட்டி அதிகாரம் தானே நடக்குது?

மகளே.. கவலைப்படாதே மா. இப்பதானே உன் மாப்பிள்ளைக்கு வயது 50 ஆயிருக்கு. உன் அருமை போக போக புரிஞ்சுக்குவாரு. தைரியமா இருமா!!

நான் வீட்டுக்கு சீக்கிரம் போகணும்மா அம்மா என்னை தேடப் போறா.. வரட்டுமா?

Friday, 7 June 2024

Psychology எந்த ஒரு துயரம் நேரும்போதும் நாம் ஐந்து நிலைகளைக் கடந்து வருகிறோம்

எந்த ஒரு துயரம் நேரும்போதும் நாம் ஐந்து நிலைகளைக் கடந்து வருகிறோம் என்பதை ஸ்விஸ் - அமெரிக்கன் மனநல மருத்துவர் எலிசபெத் கிப்ளர் ரோஸ் (Elizabeth Kubler-Ross) 1969ல் எழுதிய On Death and Dying நூலில் குறிப்பிட்டிருப்பார்.
1. Denial - மறுப்பு
“இல்லை. இது நடக்கவில்லை” என்று நம் மனம் சொல்லும்.
2. Anger - கோபம்
 
 நடந்துவிட்டது என்பதை மனம் உணர்ந்த அடுத்தநொடி கோபமாக மாறும். “ஏன் நடந்தது..”, “எனக்குப் போய் இது ஏன் நடந்தது”, “இதற்கு இதெல்லாம்தான் காரணம்” என்று சண்டை போடுவோம். எல்லார் மீதும் எரிந்து விழுவோம்.
 
3. Bargaining - பேரம்
 
அந்தத் துயரத்தைப் பேரம் பேசி கடக்க முயல்வோம். நெருங்கியவர்கள் இறப்பின்போது “கடவுளே…என் உசுர நீ எடுத்திருக்ககூடாதா?” என்பது, காதல் தோல்வியின்போது “சரி.. அட்லீஸ்ட் ஃப்ரெண்ட்சா தொடரலாமே..”, தேர்தல் தோல்வியின்போது “சின்னப்பையன், அவனை ஜெயிக்க வெச்சிருக்கலாமே…” என்பதெல்லாம் இந்தப் பேரம் எனும் நிலையில்தான் வருகிறது. 
 
4. Depression - மன அழுத்தம்
 
 இந்தக் கட்டத்தில் “அவ்ளோதான்.. எல்லாம் முடிஞ்சது”, “இனி என்ன இருக்கு” என்ற விட்டேத்தியான மனநிலையிலேயேதான் இருப்போம். யாருடனும் பேசப் பிடிக்காது. சோகத்திலேயே உழல்வோம். இந்தக் கட்டம்தான் இந்த ஐந்து நிலைகளிலும் கடக்க அதிக காலம் ஆகும் கட்டம். ஐந்தாவது நிலைக்குச் சென்றாலும் மீண்டும் சில சமயம் இந்த நான்காவது நிலைக்கு வருவோம்.
 
5. Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்
 
 மனம் அந்தத் துன்பியல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளும். “இதுதான் வாழ்க்கை. நான் சரியாகிவிடுவேன்”, “இதைக் கடக்கும் மனத்திடம் எனக்கு உண்டு” என்று நம்மைச் சொல்லவைக்கும் நிலை இது. 

ஏற்கனவே சொன்னதுபோல இந்த நிலைக்கு வந்தபின்னும் அடிக்கடி நான்காவது நிலைக்கு நம் மனம் செல்லும். ஆனால் அப்படி நான்காவது நிலைக்குச் செல்லாமல் இந்த நிலையிலேயே வாழ்வைத் தொடர்வதைத்தான் ஜென் மனநிலை என்கிறார்கள். அதெல்லாம் ரொம்பவே பெரியவிஷயம்தான்!
 
காதல் தோல்வி, அன்பானவர்களின் மறைவு, வேலை பறிபோவது, நிராகரிப்பு என்று பலவற்றிலும் இந்த ஐந்து நிலைகள் மனிதவாழ்வில் வரும்.

#psychology