எந்த ஒரு துயரம் நேரும்போதும் நாம் ஐந்து நிலைகளைக் கடந்து வருகிறோம் என்பதை ஸ்விஸ் - அமெரிக்கன் மனநல மருத்துவர் எலிசபெத் கிப்ளர் ரோஸ் (Elizabeth Kubler-Ross) 1969ல் எழுதிய On Death and Dying நூலில் குறிப்பிட்டிருப்பார்.
1. Denial - மறுப்பு
“இல்லை. இது நடக்கவில்லை” என்று நம் மனம் சொல்லும்.
2. Anger - கோபம்
நடந்துவிட்டது என்பதை மனம் உணர்ந்த அடுத்தநொடி கோபமாக மாறும். “ஏன் நடந்தது..”, “எனக்குப் போய் இது ஏன் நடந்தது”, “இதற்கு இதெல்லாம்தான் காரணம்” என்று சண்டை போடுவோம். எல்லார் மீதும் எரிந்து விழுவோம்.
3. Bargaining - பேரம்
அந்தத் துயரத்தைப் பேரம் பேசி கடக்க முயல்வோம். நெருங்கியவர்கள் இறப்பின்போது “கடவுளே…என் உசுர நீ எடுத்திருக்ககூடாதா?” என்பது, காதல் தோல்வியின்போது “சரி.. அட்லீஸ்ட் ஃப்ரெண்ட்சா தொடரலாமே..”, தேர்தல் தோல்வியின்போது “சின்னப்பையன், அவனை ஜெயிக்க வெச்சிருக்கலாமே…” என்பதெல்லாம் இந்தப் பேரம் எனும் நிலையில்தான் வருகிறது.
4. Depression - மன அழுத்தம்
இந்தக் கட்டத்தில் “அவ்ளோதான்.. எல்லாம் முடிஞ்சது”, “இனி என்ன இருக்கு” என்ற விட்டேத்தியான மனநிலையிலேயேதான் இருப்போம். யாருடனும் பேசப் பிடிக்காது. சோகத்திலேயே உழல்வோம். இந்தக் கட்டம்தான் இந்த ஐந்து நிலைகளிலும் கடக்க அதிக காலம் ஆகும் கட்டம். ஐந்தாவது நிலைக்குச் சென்றாலும் மீண்டும் சில சமயம் இந்த நான்காவது நிலைக்கு வருவோம்.
5. Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்
மனம் அந்தத் துன்பியல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளும். “இதுதான் வாழ்க்கை. நான் சரியாகிவிடுவேன்”, “இதைக் கடக்கும் மனத்திடம் எனக்கு உண்டு” என்று நம்மைச் சொல்லவைக்கும் நிலை இது.
ஏற்கனவே சொன்னதுபோல இந்த நிலைக்கு வந்தபின்னும் அடிக்கடி நான்காவது நிலைக்கு நம் மனம் செல்லும். ஆனால் அப்படி நான்காவது நிலைக்குச் செல்லாமல் இந்த நிலையிலேயே வாழ்வைத் தொடர்வதைத்தான் ஜென் மனநிலை என்கிறார்கள். அதெல்லாம் ரொம்பவே பெரியவிஷயம்தான்!
காதல் தோல்வி, அன்பானவர்களின் மறைவு, வேலை பறிபோவது, நிராகரிப்பு என்று பலவற்றிலும் இந்த ஐந்து நிலைகள் மனிதவாழ்வில் வரும்.
#psychology