Wednesday, 31 July 2019

புனிதர்கள் சுவக்கீம், அன்னா தூய மரியாவின் பெற்றோர் நினைவு l

*நிகழ்வு* 

இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதப்பட்ட, திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்படும் செய்தி.

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம், அன்னமாளுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆனபின்பும் குழந்தைப் பேறு இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மரியாவின் தந்தையாகிய ஜோக்கிம் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது வானதூதர் அவருக்குத் தோன்றி, “ஜோக்கிம்! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது, உன் மனைவி ஒரு மகளைப் பெற்றெடுப்பார்” என்று சொல்லிவிட்டு மறந்து போனார். அன்னமாளுக்கும் வானதூதர் தோன்றி அதே செய்தியைச் சொன்னார். வானதூதர் சொன்னது போன்று பத்தாம் மாதத்தில் அன்னம்மாள் ஒரு மகவைப் பெற்றெடுத்தார். அவர்தான் மரியா.

*வாழ்க்கை வரலாறு*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளைக் குறித்து விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை, மேலே சொல்லப்பட்ட யாக்கோபு நற்செய்தியில்தான் அவர்களைப் பற்றிய செய்தி காணக்கிடக்கிறது. ஜோக்கிம் என்றால் ‘கடவுள் தயார் செய்கிறார்’ எனப் பொருள், அன்னம்மாள் என்றால் ‘அருள்’ எனப் பொருள்படுகின்றது. அந்த நற்செய்தியின் படி, ஜோக்கிம் அன்னம்மாள் தம்பதியர் கடவுளுக்கு அஞ்சி நடக்கின்றவர்களாக, ஜெபிக்கின்ற தம்பதியராக வாழ்ந்து வந்தார். எந்தளவுக்கு என்றால், இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாது இருந்தாலும், அவர்கள் இறைவனிடத்தில் ஜெபிப்பதற்கு மறக்கவில்லை, அனுதினமும் அவர்கள் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார்கள். அந்த ஜெபத்தினாலேயே மரியாவைப் பெற்றெடுத்தார்கள்.

அடுத்ததாக ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்கள். எப்படியென்றால் தங்களுடைய வருமானத்தை மூன்று பக்தியாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை எருசலேம் திருக்கோவிலுக்கும், இன்னொரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும், மூன்றாவது பகுதியை தங்களுக்கென பயன்படுத்தியும் வந்தார்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் பெற்ற செல்வம் தங்களுக்கானது மட்டும் அல்ல, அது பிறருக்கானது என்று வாழ்ந்ததனால்தான்   இறைவனுடைய கடைக்கண் பார்வை அவர்கள்மீது பட்டது. ‘நம்மோடு இருப்பவர்களை நாம் பராமரித்துக்கொண்டால், இறைவன் நம்மைப் பராமரிப்பார் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

மூன்றாவதாக, ஜோக்கிமும் அன்னம்மாளும் நன்றியுள்ள தம்பதியராக வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அவருடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார். அதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்நாள் எல்லாம் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். கடவுள் தந்த குழந்தையை கடவுளுக்கே அர்ப்பணித்து, தங்களுடைய நன்றியுணர்வை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கு உகந்த தம்பதியராய் வாழ்ந்து, சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள். 

ஜோக்கிம் அன்னம்மாள் விழா தொடக்க காலங்களிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஜஸ்டினியன் என்பவர் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் இந்த புனிதர்களுக்கு முதல்முறையாக ஆலயம் ஒன்றைக் கட்டினார். அதன்பிறகு புனித எலேனா என்பவர் ஜோக்கிம் அன்னம்மாள் வாழ்ந்த இல்லத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். ஆனால் அது முகமதியர்களால் கைப்பற்றப்பட்டு, பள்ளிக்கூடமாக மாறத்தொடங்கியது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறாம் சிக்ஸ்துஸ் என்ற திருத்தந்தை என்பவர் ‘மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைத் (நவம்பர் 21) தொடங்கி வைத்து, ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தங்களுடைய குழந்தை மரியாவை  கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அவரை இறைப்பணிக்காக அர்ப்பணித்தனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். 

திருச்சபையின் ஒருசில மரபுகள் மற்றும் ஓவியங்கள், ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் இயேசுவின் பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டார்கள் எனச் சொல்லும். எப்படியிருந்தாலும் அவர்கள் உலக மீட்பராம் ஆண்டவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவைப் பெற்றெடுத்தவர்கள், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ஆண்டவரின் தாயைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் அவர்கள். அதற்காக நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. சிறந்த பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டு*

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யிலாளர் தேபெஸ் நகரைச் சேர்ந்த கிரேட்ஸ் (Crates of Thebes) என்பவர். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். காரணம் இவருடைய போதனை மக்களின் உள்ளத்தைத் தைப்பது போன்று இருக்கும். இவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நீதிநெறிகளை, ஒழுக்கநெறிகளைப் போதிக்காமல் அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது, எப்பி பொருள் ஈட்டுவது என்றே கற்பித்து வந்தார்கள். இதைப் பார்த்து சினம்கொண்ட கிரேட்ஸ் என்ற அந்த மெய்யியலாளர் ஒருநாள் ஊரில் இருந்த மலைமீது ஏறி, “பெற்றோர்களே! நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி நெறிகளைப் போதிக்காமல், அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்று போதிக்கிறீர்கள், உங்கள் பிள்ளைகளைவிட அவர்கள் சம்பாதிக்கும் பணம்தான் பெரிது என்றா நினைக்கிறீர்கள்?” என்று அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். 

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நீதிநெறியில், ஒழுக்க நெறியில் கடவுளுக்கு உகந்த வழியில் வளர்க்காதது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ‘பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்’ என்பதை மறந்து போனார்கள். ஆனால் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக, முன்மாதிரியான பெற்றோராய் இருந்து, தங்களுடைய மகளை இறைவழியில் வழிநடத்தியவர்கள் ஜோக்கிமும் அன்னம்மாளும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” (மத் 7:17) ஆம், ஜோக்கிமும் அன்னமாவும் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பதை மரியாவைக் கொண்டே அறியலாம். மரியா தூயவராக, மாசற்றவராக, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவராக, எளியவருக்கு இரங்குபவராக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவராக விளங்கினார் என்றால் இத்தகைய பேறும் புகழும் மரியாவின் பெற்றோரான ஜோக்கிம் மற்றும் அன்னமாளுக்குத்தான் போய் சேரும். அவர்கள்தான் தங்களுடைய குழந்தைக்கு முன்மாதிரியாக இருந்து, அவரை இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்த்தெடுத்தார்கள். ஆகவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களை கடவுளுக்கு உகந்த பிள்ளையாக வளர்த்தெடுப்பது அவர்களுடைய கடமையாகும். 

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டான். “நம்முடைய பிரான்சு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக வேண்டுமென்றால் நல்ல தாய்மார்கள் உருவாகவேண்டும்”. நல்ல தாய்மார்கள் மட்டுமல்ல, தந்தையர்கள் உருவாகினால்தான் நல்ல குடிமக்கள் உருவாவார்கள். ஆகவே, மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நாம் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவோம், அவர்களை இறைவழியில் நடத்துவோம், அதன்வழியாக இறையருள் 


தூய ஷார்பெல் மஹ்லூப் வாழ்க்கை வரலாறு

*தூய ஷார்பெல் மஹ்லூப் 

_“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்._

*வாழ்க்கை வரலாறு*

ஷார்பெல், லெபனான் நாட்டில் உள்ள பே-குவா-கப்ரா என்னும் இடத்தில்  1828 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய  தந்தை இறந்து போனார். எனவே இவர் இவரது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஷார்பெல் சிறுவயது முதலே பக்தியில் சிறந்துவிளங்கி வந்தார். இவரிடமிருந்து விளங்கிய பக்தியைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். இவர் வளர்ந்து பெரியவராகிய போது மேபுங் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து, கல்விகற்று 1859 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய இருபத்தியோறாவது வயதிலே குருவாக மாறினார். 

குருவாக மாறிய பின்பு, ஷார்பெல் தன்னுடைய குருத்துவ  வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையிலும் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவருடைய ஜெப வாழ்வு, துறவுமடத்தில் இருந்த பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. சிலகாலம் மேபுங் துறவுமடத்தில் இருந்த ஷார்பெல், அதன்பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு துறவுமடம் அமைத்து, அதில் ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

புதிய இடத்தில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மிகப்பெரிய துறவியான தூய மரோன் என்பவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி முன்பைவிட ஜெபத்திற்கும் தவத்திற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். இது மட்டுமல்லாமல், கட்டாந்தரையில்தான் படுத்து வந்தார், ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வந்தார். இப்படி அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், அவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் அவர் படுத்த படுக்கையாகி 1898 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1977 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஷார்பெலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*1. ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்*

தூய ஷார்பெலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகின்ற மேலான சிந்தனை, நாம் அனைவரும் ஜெபிக்கக்கூடிய மக்களாக இருக்கவேண்டும் என்பதுதான். அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஜெபம் செய்து வந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்கவில்லை என்றாலும் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது தேவையான ஒன்றான இருக்கின்றது.

இன்றைய சூழலில் ஜெபிப்பதனால் ஏதாவது பலன், நன்மை கிடைக்குமா? என்று ஒருசிலர் கேட்கலாம். ஜெபிப்பதனால் எத்தகைய நன்மையை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதை விளக்க ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அட்லாண்டிக் பெருங்கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு நைஜீரிய எண்ணெய் கப்பலானது பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போனது. அந்தக் கப்பலில் பதிமூன்று பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் அனைவருமே இறந்துபோயிருப்பர் என எல்லாரும் நம்பினார்கள். இதற்கிடையில் அந்தக் கப்பலில் சமைப்பவராக இருந்த ஹாரிசன் என்பவர், தான் ஒரு இராட்சதக் குழாயினுள் போவதையும் தன்னுடைய உடல் குளிரில் உறைந்துகொண்டிருப்பதையும் நன்றாகவே உணர்ந்தார்.  உடனே அவர் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தைப் பற்றி தன்னுடைய மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார். 

இன்னொரு பக்கம் எண்ணெய் கப்பல் பனிப்பாறையில் மோதிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கப்பலில் பயணம் செய்த அனைவருமே இறந்துபோயிருப்பர் என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டு மீட்புப் பணியைத் தொடங்கினார். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கிய சிலமணி நேரத்திற்குள் ஒருவருடைய கையானது தண்ணீருக்குள் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அந்த மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அந்தக் கையைப் பிடித்து இழுத்தபோது, அந்தக் கையானது இவருடைய கையைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தது. அப்போதுதான் அந்த மனிதர் (ஹாரிசன்) உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிறுது நேரத்தில் மீட்புக் குழுவினர் அவரை மேலே இழுத்துக்கொண்டு வந்து, அவர்மீது வெந்நீர் ஊற்றி, அவருக்கு ஆக்ஜிசன் பொறுத்த, அவர் பிழைத்துக் கொண்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர்கள் அவரிடம், “உன்னால் மட்டும் எப்படி இந்தக் குளிரில் மூன்று நாட்களும் தாக்குபிடிக்க முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நான் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியபோது செய்தியை அலைப்பேசி வழியாக என் மனைவியிடம் சொல்ல, அவள் எனக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தாள். அந்த ஜெபத்தின் பயனாகவே உயிர்பிழைத்தேன்” என்றார்.

ஜெபம் வல்ல காரியகளைச் செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.  ஆகவே, தூய ஷார்பெல்லின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



அந்தியோக்கு நகர தூய மார்கரேட் வாழ்க்கை வரலாறு

_“யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது (1 கொரி 1: 22,23)._

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட், அந்தியோக்கு நகரில் இருந்த ஒரு பிறமத குருவினுடைய மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது கிறிஸ்தவப் போதனைகளால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதை அறிந்த மார்கரேட்டின் தந்தை அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார். இதனால் மார்கரேட் வீட்டைவிட்டு வெளியே சென்று, ஆடுமேயத்து பிழைத்து வந்தார்.

மார்கரேட் பேரழியாக இருந்தார். எனவே அவருடைய அழகில் மயங்கிய பலரும் அவரை மணந்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால் மார்கரேட்டோ யாரையும் மணந்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் ஒலிப்ரயுஸ் என்பவன் மார்கரேட்டை எப்படியாவது மணந்துகொள்ளத் தீர்மானித்தான். அதனால் அவன் மார்கரேட்டிடம் சென்று, அவரை வற்புறுத்திக் கேட்டான். ஆனால் மார்கரேட்டோ தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினம்கொண்டவன் அவரை, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றார் என்று ஆளுநனின் போட்டுக்கொடுக்க, அவன் அவரைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான்.

மார்கரேட் இவ்வாறு சிறையில் அடைபட்டு, சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில், சாத்தான் இராட்சதப் பாம்பு வடிவில் வந்து, அவரை விழுங்கப் பார்த்தது. ஆனால் அவர் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையோ பாம்பை இரண்டாகக் கிழித்துப் போட்டது. இதைப் பார்த்த வியந்துபோன சிறைக்கைதிகள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இச்செய்தி ஆளுநனின் செவிகளை எட்ட, அவன் மார்கரேட்டை எரிகின்ற எண்ணெய் கொப்பறையில் தூக்கிப் போட்டான், அது ஒன்றும் செய்யவில்லை. இதனால் அவன் மார்கரேட்டின் தலையை வெட்டிக் கொன்று போட்டான். இவ்வாறு மார்கரேட் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*  

தூய மார்கரேட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
  
*1. சிலுவை மீட்பின் சின்னம்* 

தூய அந்தியோக்கு நகர மார்கரேட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. மார்கரேட் சிறையில் அடைபட்டிருந்த தருணத்தில் பாம்பு வடிவில் இருந்த சாத்தானோ அவரை விழுங்க நினைத்தபோது, மார்கரேட் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையால் அதனை இரண்டு துண்டாக்கினார். இங்கே சிலுவை மார்கரேட்டுக்கு சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவித்து, வாழ்வினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

தூய மார்கரேட்டின் வாழ்க்கையில் நடந்தது போல, நம்முடைய வாழ்விலும் அதிசயங்கள் நடைபெறும். எப்போது என்றால், நாம் சிலுவையின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்கின்றபோது. பல நேரங்களில் நாம், நம்முடைய நெற்றியில் அடிக்கடி சிலுவை அடையாளம் வரைவதாலோ என்னவோ அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலே இருக்கின்றோம். என்றைக்கு நாம் சிலுவையை நம்முடைய வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாகப் பார்க்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதன்வழியாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசிர்வாதங்கள் ஏராளம்.

இடைக்காலத்தில் கீழை நாடுகளின்மீது முகமதியர்களின்  படையெடுப்பு அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் யாராரெல்லாம் அவர்கள் கையில் அகப்பட்டார்களோ (கிறிஸ்தவர்கள் உட்பட) அவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றினார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கிறிஸ்தவர்கள் தீவிரமாக யோசித்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ‘முகமதியர்களுக்கு சிலுவை அடையாளமே பிடிக்காது. ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுடைய நெற்றியிலே இரும்பை நன்றாகச் சூடாக்கி, சிலுவை அடையாளம் வரைந்துகொண்டால், அதனைப் பார்க்கின்ற  எதிரிகள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்’ என்று சொல்ல, அந்த யோசனை பலருக்கும் பிடித்துப் போனது.

எனவே அவர்கள் அனைவரும் இரும்பைச் சூடாக்கி, தங்களுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டார்கள். ஒருசிலர் மட்டும் இரும்பைச் சூடாக்கி, நெற்றியில் சிலுவை அடையாளம் வரைவதா? அதெல்லாம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் முகமதியரின் படையெடுப்பு நிகழ்ந்த போது யாராருடைய நெற்றில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் யாவரும் விடப்பட்டு, அடையாளம் பொறிக்கப்படாதவர்கள் யாவரும் இழுத்துக்கொண்டு போகப்பட்டு, முகமதியர்கள் ஆக்கப்பட்டார்கள். இது ஒரு வரலாற்றுச் செய்தி

இங்கே சிலுவை மக்களுக்கு பாதுக்காப்பினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. நமது வாழ்விலும் சிலுவையின் வழியாக சிம்மாசனத்தை அடையலாம்.

ஆகவே, தூய மார்கரேட்டைப் போன்று, நமது வாழ்வில் சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்து வாழ்வோம், எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.