Wednesday, 31 July 2019

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்

*மத்தேயு 10: 34-11:1*

*“தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்”*

*நிகழ்வு*

நெதர்லாந்து நாட்டில் பிறந்த மிகச்சிறந்த ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals) என்பவர். அவருடைய ஓவியங்கள் இன்றைக்கும் மக்களால் வியந்து பாராட்டப்படுகின்றன. ஆனால், அவர் ஒரு பயங்கரக் குடிகாரர். குடித்துவிட்டால் அவர் சுயநினைவை இழந்து எங்காவது விழுந்து கிடப்பார். மக்கள்தான் அவரை அவருடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு வந்து, படுக்கையில் கிடத்துவார்கள். இது ஒருநாள்கூடத் தவறாமல், நாள்தோறும் நடந்துகொண்டிருந்தது. மக்களும் அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததால், அவர் குடித்துவிட்டுச் சாலையில் கிடப்பதைப் பெரிதாகக் கருதாமல், அவரைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார்கள். 

இதற்கிடையில் மக்கள் அவரைப் படுக்கையில் கிடத்துகின்றபோது அவர், “கடவுளே! மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் மன்றாடிவந்தார். இதைக் கவனித்த ஒருசிலர்,  அவ்வார்த்தைகளை அவர் உணர்ந்துதான் சொல்கிறாரா? அல்லது கேளிக்கைகாகச் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினார்கள். எனவே அவர்கள் பிரான்ஸ் ஹால்ஸினுடிய படுக்கைக்கு மேலிருந்த தளத்தில் நான்கு துளைகளைப் போட்டு, அவற்றின் வழியாக நான்கு கயிறுகளை இறக்கி, அவற்றை அவர் படுக்கும் கட்டிலின் நான்கு கால்களோடும் இறுகக் கட்டினார்கள். 

வழக்கம் போல் குடித்துவிட்டுத் தெருவோரத்தில் கிடந்த பிரான்ஸ் ஹால்சை மக்கள் தூக்கிக்கொண்டு அவருடைய படுக்கையில் கிடத்தினார்கள். அவர் கட்டிலில் கிடத்தப்பட்டதும் எப்போதும் சொல்கின்ற, ‘கடவுளே மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்று சொல்லி மன்றாடத் தொடங்கினார். உடனே கட்டிலோடு பிணைக்கப்பட்ட கயிறுகளைப் பிடித்துக்கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் வேகமாக இழுக்கத் தொடங்கினார்கள். தான் மேலே செல்கின்றோம் என்பதை உணர்ந்த பிரான்ஸ் ஹால்ஸ், “‘கடவுளே! பாவியாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்’ என்றுதான் வேண்டினேன்... ஆனால், இவ்வளவு சீக்கிரம் என்னை மேலே எடுத்துக்கொள்ளும் என்று வேண்டவில்லை” என்றார். 

‘இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் போய்விடவேண்டும்’ என்று சொல்பவர்கள்கூட உயிர் வாழவும் அல்லது உயிரைக் காத்துக்கொள்ளவும் தான் ஆசைப்படுகின்றார்கள். இப்படித் தங்களுடைய உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர் என்று நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*உயிரைக் காக்க நினைப்பவர் இழந்துவிடுவர்* 

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார். அவ்வாறு அவர் அவர்களை அனுப்புகின்றபோது, அவர்கட்கு ஒருசில அறிவுரைகளையும் சிந்தனைகளையும் தருகின்றார். அவற்றில் ஒன்றுதான், ‘உயிரைக் காக்க நினைப்பவர் அதை இழந்துவிடுவர். உயிரை இழக்க நினைப்பவரோ, அதைக் காத்துக்கொள்வார்’ என்பதாகும். 
முதலில் உயிரைக் காத்துக்கொள்ள நினைப்பவர் எப்படி அதை இழக்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தன்னைப் பின்பற்றுகின்றவர்கள், மற்ற எல்லாரையும் விட தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தன்னுடைய சிலுவையைச் சுமக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சிலுவையை சுமப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக ஒருவர் உயிரையும் தரவேண்டும். உயிரைத் தரவேண்டுமே என்று நினைத்துக்கொண்டு ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதையும் சிலுவை சுமப்பதையும் நிறுத்திக்கொண்டுவிட்டால், அவர் இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தகுதியற்றவராய்ப் போவது மட்டுமன்றி, வாழ்வையும் இழக்கின்றார். ஏனென்றால், இயேசுதான் வாழ்வாக இருக்கின்றார் (யோவா 14:6). ஆகையால், சிலுவையைச் சுமப்பதால் வரும் துன்பங்கட்குப் பயந்து ஒருவர் இயேசுவைப் பின்தொடராமல் இருந்தால், அவர் தன்னுடைய வாழ்வை இழந்து விடுவார் என்று  உறுதி. 

*உயிரை இழக்க நினைப்பவரோ காத்துக்கொள்வர்*

உயிரைக் காக்க நினைப்போர், அதை இழந்துவிடுவர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், உயிரை இழக்க நினைப்பவர் அதை எவ்வாறு காத்துக்கொள்கின்றனர் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

மேலே நாம் சிந்தித்துப் பார்த்ததுபோல, இயேசுவைப் பின்பற்றுவதால் சிலுவையை சுமக்க நேரிடலாம். அதன்பொருட்டு உயிரையும் இழக்கலாம். அவ்வாறு நாம் உயிரை இழக்கின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்கின்றோம். எப்படி என்றால், இயேசு சொல்வதுபோல, கோதுமை மணி விழுந்து மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும். மடியாவிட்டால் அது அப்படியேதான் இருக்கும் (யோவா 12:24) அதுபோன்றுதான் இயேசுவின் பொருட்டு நம்முடைய வாழ்வை  இழக்கத் துணிகின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால், நம்முடைய உயிரைக் காக்கவே முடியாது. 

*சிந்தனை*
‘என் பெயரின் பொருட்டு வீடுகளையோ சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறுமடங்காகப் பெறுவர், நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்’ (மத் 19:20) என்பார் இயேசு. ஆகவே, இயேசுவின் பொருட்டு எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

துன்பம் நம்மைப் புடமிடும்

*விடுதலைப் பயணம் 1: 8-14, 22*

*துன்பம் நம்மைப் புடமிடும்*

*நிகழ்வு*

தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர்க்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தன. இதனால் அவருடைய வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படி இருக்கையில் அவருடைய தொழிலில் தொடர் தோல்விகள் ஏற்படவே அவர் கடன்காரரானார். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி, மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். 

இடையில் ஓர் ஊர் வந்தது. அந்த ஊரின் எல்லையில் இருந்த நிலத்தில் விவசாயி ஒருவர் கோதுமை மணிகளை விதைத்து, அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தத் தொழிலதிபர் விவசாயியிடம், “என்னய்யா நீங்கள்! அதான் கோதுமை மணிகளை நிலம் முழுவதும் விதைத்து விட்டீர்களே!. பிறகு எதற்கு அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்றார். “கோதுமை மணிகள் மண்ணுக்குள் ஆழமாகப் போனால்தானே மழை பெய்யும்போதும் தண்ணீர் பாய்ச்சும் போதும் அவை நிலத்தில் உறுதியாக இருந்து நிறைந்த பலனைத் தரும்” என்றார் விவசாயி. இதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தவராய் விவசாயி தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். 

சிறிதுதூரம் அவர் சென்றதும் விவசாயி ஒருவர், இரண்டு ஏர்மாடுகளை வைத்து, நிலத்தை ஆழமாக உழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு தொழிலதிபர் அந்த விவசாயியைப் பார்த்து, “ஐயா பெரியவரே! நீங்கள் இப்படி நிலத்தை ஆழமாக உழுவதால், அதற்கு வலிக்காதா? அது மிகபெரிய குற்றமாகாதா?” என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, “அப்படியில்லை... நிலத்தை ஆழமாக உழுதால்தான் பயிரிடுவதற்குத் தோதுவாக இருக்கும். இல்லையென்றால், இந்நிலத்தில் பயிர்செய்ய முடியாது” என்றார். 

அந்த விவசாயி சொன்னதையும் காதில் போட்டுக்கொண்டு தொழிலதிபர் தொடர்ந்து நடந்தார். இன்னும் சிறிதுதூரம் அவர் சென்றிருப்பார். அப்பொழுது ஒருவர் தன்னுடைய மல்லிகைத் தோட்டத்தில் இருந்த செடிகளை கத்திரியால் வெட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் தொழிலதிபர் அவரிடம், “நன்றாக வளர்ந்திருக்கின்ற இந்த மல்லிகைச் செடிகளை இப்படி வெட்டிக்கொண்டிருக்கின்றீர்களே... இது உங்களுக்கு நன்றாக இருக்கின்றதா?” என்றார். உடனே அந்த மனிதர் அவரிடம், “இந்த மல்லிகைச் செடிகளை அவ்வப்போது சீராக  வெட்டிவிட்டால்தான் அவை நல்ல பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அவை பெயருக்கு வளர்ந்திருக்குமே ஒழியே, சரியாகப் பூக்கள் பூக்காது” என்றார். 

இப்பொழுது அவர், அந்த மூன்று விவசாயிகள் சொன்னதையும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினார். ‘கோதுமை மணிகள் நல்ல பலனைத் தர, அவை நன்றாகக் கொத்தப்பட்ட நிலத்தினுள்ளே போடப்படுகின்றன... நிலம் நல்ல பலனைத் தர, ஆழமாக உழப்படுகின்றது. மல்லிகைச் செடிகள் நன்றாகப் பூப்பூக்க அவ்வப்போது கத்தரிக்கப்படுகின்றன. அப்படியானால் நானும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற இதுபோன்ற துன்பங்களால் புடமிடப்படவேண்டியது அவசியம்தானோ!’ இத்தகைய தெளிவினை அவர் பெற்றுக்கொண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட துன்பங்கட்காக இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். பின்னர் கடுமையாக உழைத்து தன்னுடைய தொழிலில் முன்பைவிடப் பெரிய நிலையை அடைந்தார். 

ஒருவருடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள் அவரைப் புடமிடுகின்றன. அத்தகைய துன்பங்களை அவர் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகின்றன. இந்திய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் –எபிரேயர்கள் - பாரவோன் மன்னனால் துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் பட்ட துன்பம் அவர்களை மிகவும் வலிமைவாய்ந்த ஓர் இனமாக மாற்றுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

*இஸ்ரயேல் மக்கள் பாராவோனின் ஆட்சியில் துன்பப்படக் காரணமென்ன?*    

கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால், எகிப்திற்குச் செல்லும் யாக்கோபின் குடும்பம் அங்கு, ஆண்டவர் சொன்னது போன்று (தொநூ 12) பலுகிப் பெருகுகின்றது. இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டை ஆண்ட பாரவோன் மன்னன் யாக்கோபின் சந்ததியினரைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகின்றான். அவன் ஏன் அவர்களைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்றால், அவனுக்கு அவர்களைக் குறித்து முழுவதுமாகத் தெரியாமல் இருந்தது. அடுத்ததாக, எபிரேயர்கள் எகிப்தியர்களைவிட செழித்தோங்கி வளர்ந்திருந்தார்கள். இதைவிட மிக முக்கியமான காரணம், எபிரேயர்கள் அதாவது யாக்கோபின் சந்ததியினர் நாட்டின் எல்லைப் பகுதிகளில் குடியிருந்தார்கள். அவர்கள் எதிரி நாட்டினரோடு கைகோர்த்தால் தன்னுடைய நாட்டிற்கு அது வினையாகிவிடும்  என்று நினைத்து பாரவோன் அவர்களைக் கொடுமைப்படுத்துகின்றான். 

*துன்பங்களின் வழியாக தன் மக்களைப் புடமிட்ட இறைவன்*

பாரவோனின் ஆட்சியில் கட்டிட வேலைகளிலும் விவசாயம் சார்ந்த வேலைகளிலும் எபிரேயர்கள் ஈடுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். இத்துன்பங்களின் வழியாக கடவுளை அவர்களை உறுதிப்படுத்தி, அவர்களை இன்னும் வலிமை வாய்ந்த இனமாக உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் அவர்கள் வழியாக பேரரசராம் ஆண்டவர் இயேசுவைத் தோன்றச் செய்கின்றார்.

சில சமயங்களில் நாம் நினைக்கலாம், ‘இந்தத் துன்பமெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று. இறைவன் துன்பங்களின் வழியாக நம்மை வலிமையுறச் செய்கின்றார். அதற்காகவே, அவர் துன்பங்களை நம்முடைய வாழ்வில் அனுமதிக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தொமெனில் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு நாம் அஞ்ச மாட்டோம். 

*சிந்தனை*

‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்’ (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகவே, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து இலக்கை நோக்கி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் 

தூய கமிலஸ் தே லெல்லிஸ் வாழ்க்கை வரலாறு

*தூய கமிலஸ் தே லெல்லிஸ் (ஜூலை 14)*

_“இயேசுவே என் இறைவனே! உம் மக்களும் உம் சகோதர சகோதரிகளுமான நோயாளிகளுக்கு என் முழு உள்ளத்தோடு சேவை செய்ய நான் வாக்களிக்கின்றேன்” – தூய கமிலஸ்_ 

*வாழ்க்கை வரலாறு*

கமிலஸ், இத்தாலியில் உள்ள அப்ருசி என்னும் இடத்தில் 1550 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தையே இல்லை. பல்வேறு விதமான ஒறுத்தல் மற்றும் பக்தி முயற்சிகளுக்கு பின்னேதான் இவர் பிறந்தார்.

கமிலசின் தந்தை ஒரு போர்வீரர். எனவே இவரும் தன் தந்தையை போன்று போர்வீராக மாற ஆசைப்பட்டார். இவர் ஆசைப்பட்டது போலவே பின்னாளில் ஒரு போர்வீரராகி துருக்கியர்களுக்கு எதிரான போரில் கலந்துகொண்டார். அந்தப் போரில் இவருடைய காலில் குண்டடிபட்டதால் இவருடைய வாழ்க்கையே கேள்விக்குறியானது.

இவர் தன்னுடைய காலில் பட்ட குண்டை அகற்றுவதற்கு உரோமை நகரில் இருந்த சான் ஜியாகோமா என்ற மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவர் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார். அந்நாட்களில் இவருடைய நடத்தை சரியில்லாததால் இவர் வெளியே துரத்தப்பட்டார். அதனால் இவர் தெருவில் பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது கப்புச்சின் சபையைச் சார்ந்த ஒரு துறவி இவருடைய நிலையைப் பார்த்து, இவருக்கு தன்னுடைய துறவுமடத்தில் வேலை ஒன்றை போட்டுக்கொடுத்தார். அங்கே இவருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றம் காணப்பட்டது. இதன்பிறகு இவர் முன்பு தான் மருத்துவ உதவிகளைப் பெற்றுவந்த சான் ஜியோகோமோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவருடைய நடத்தையில் காணப்பட்ட நிறைய மாற்றங்களைக் கண்டு, இவரை அங்கேயே தங்கச் செய்தனர். அங்கு தன்னிலும் வறிய நிலையில் இருந்த நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்யத் தொடங்கினார்; அவர்களை நல்லவிதமாய் பராமரித்துக் கொண்டார். இதனால் இவருக்கு நல்ல நல்ல மதிப்பு உண்டானது.

இப்படி இவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் இவருக்கு தூய பிலிப்பு நெரியாரின் நட்பு கிடைத்தது. அவரை இவர் தன்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டு, நிறைய காரியங்களில் ஆலோசனை பெற்று வந்தார். ஒருகட்டத்தில் கமிலசுக்கு நோயாளிகளுக்காக சபை ஒன்றைத் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனை இவர் தன்னுடைய ஆன்ம குருவிடத்தில் சொன்னபோது, “நல்ல காரியம், விரைவாகத் தொடங்கு” என்றார். உடனே கமிலஸ் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள, The Clerks Regular of Good Death, Ministers to the Sick எனப்படும் கமிலியன் சபையைத் தோற்றுவித்தார். இந்த சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான்.

கமிலஸ் ஏற்படுத்திய சபையில் நிறையப் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தார். அவர்களுடைய ஒத்துழைப்பின் பேரில், நோயாளிகளைக் கவனித்துக் கொள்கின்ற பணியினை மிகச் சிறப்பான முறையில் செய்தார்.

இப்படி நோயாளிகள் நலம்பெற தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த கமிலஸ்  1614 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1746 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் சிங்கராயரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. நோயாளிகளிடத்தில் அக்கறை* 

தூய கமிலசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் நோயாளிகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. கமிலஸ் தன்னிடத்தில் வந்த நோயாளிகளை தன்னுடைய சகோதர சகோதரிகளைப் போன்று பார்த்து, அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்துவந்தார்.

தூய கமிலசைப் போன்று நாம் நோயாளிகளிடம் அக்கறையும் அன்பும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித் தீர்ப்பின் போது ஆண்டவர் இயேசு தனக்கு முன்பாகக் கூடியிருந்தவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி, “நான் நோயுற்றிருந்தேன் என்னை கவனித்துக் கொண்டாயா?” என்பதுதான். இந்த இறைவார்த்தை இயேசு ஒவ்வொரு நோயாளியிடமும் இருக்கின்றார், நோயாளியைக் கவனித்துக் கொள்ளும்போது நாம் இயேசுவையே கவனித்துக் கொள்கின்றோம் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது.

ஆகவே, தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடத்தில் இயேசுவைக் காண்போம், அவர்களுக்கு அன்போடும் கரிசனையோடும் சேவை செய்வோம்.