*‘இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’*
*நிகழ்வு*
ஹாட்ரியன் என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஒருநாள் அவன் யூத இரபியான யோசுவாவிடம் சென்று, “நீங்கள் கடவுளிடம் பேசுவதாகச் சொல்கிறீர்கள்; ஆனால் அவர் எங்கே இருக்கின்றார் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒருவேளை அவர் இருக்கின்றார் என்றால், எனக்குக் காட்டுங்கள்” என்றார். அதற்கு இரபி யோசுவா, “அதெல்லாம் முடியாது” என்று பதிலுரைத்தார்.
“கடவுளைக் காணமுடியாதா...? அப்படியானால், காணமுடியாத கடவுளை நான் எப்படி நம்புவது...?” என்றான் ஹட்ரியான். இரபி யோசுவா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் மன்னனை அறையைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு சென்று, சூரியனைப் பார்க்கச் சொன்னார். அதுவோ நண்பகல் வேளை. சூரியனைப் பார்க்க முயன்ற ஹாட்ரியனால் அதைப் பார்க்கவில்லை. அதனால் அவன் இரபி யோசுவாவிடம், “என்னால் பார்க்கமுடியவில்லை” என்றான். அப்பொழுது இரபி யோசுவா அவனிடம், “படைப்புப் பொருளையே பார்க்கமுடியாத உன்னால், படைத்தவனை எப்படிப் பார்க்க முடியும்?” என்றார். ஹட்ரியன் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.
கடவுளைக் காணவேண்டும் என்று கேட்ட ஹட்ரியன் என்ற மன்னனுக்கு இரபி யோசுவா தக்க பதில் தந்தது போன்று, இன்றைய நற்செய்தியில் அடையாளம் வேண்டும் என்று பரிசேயர்களுக்கு இயேசு தக்க பதில் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.
*ஏன் அடையாளம் கேட்டார்கள்?*
இயேசுவின் செல்வாக்கு நாளொன்று மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. இதைக் கேள்விப்பட்ட ‘பொறாமை மிகுந்த’ பரிசேயர்கள் அவரை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து, வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, எந்த அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டுமாறு கேட்டார்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.
இணைச்சட்ட நூல் 13: 1-3, 18: 18-22 இல் இவ்வாறு வாசிக்கின்றோம். ‘உங்களிடையே ஓர் இறைவாக்கினனோ அல்லது கனவு காண்பவனோ தோன்றி, அடையாளம் காட்டுகின்றேன் என்று சொன்னால், உடனே அவனை நம்பிவிடவேண்டாம். ஏனெனில் அவன் உங்களை வேற்றுதெய்வங்களை வழிபடத் தூண்டுவான்.’
மேல்கண்ட இறைவார்த்தையின் அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம்; ஆனால், சாதாரண மக்கள் இயேசுவை இறைவாக்கினராக, தாவீதின் மகனாக, மெசியாவாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டதுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது. ஒருவேளை இயேசுவால் அடையாளம் தரமுடியாத பட்சத்தில் அவர் இறைவாக்கினர் கிடையாது என்ற செய்தியை மக்களிடம் பரப்பலாம் என்ற எண்ணத்தில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.
*இயேசு தந்த அடையாளம்*
வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபொழுது, இயேசு பெருமூச்சு விட்டு, இத்தீய தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியாகச் சொல்கின்றார். மத்தேயு நற்செய்தியில், பரிசேயர்கள் அடையாளம் கேட்டபொழுது, இயேசு யோனாவை அடையாளமாகத் தருவார் (மத் 16:4); ஆனால், மாற்கு நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எந்த அடையாளமும் தரப்பட மாட்டாது என்று உறுதியாகக் கூறுகின்றார். இதற்கு முக்கியமான காரணம், இந்த நிகழ்விற்கு முன்பு இயேசு எத்தனையோ வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்திருப்பார். அவற்றைக் கண்டு, சாதாரண மக்கள் இயேசுவின் நம்பிக்கை கொண்டார்கள். இந்தப் பரிசேயர்கள்தான் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைச் சோதித்துப் பார்க்கின்றார்கள். இதனாலேயே இயேசு அவர்களிடம் அடையாளம் எதுவும் தரப்படமாட்டது என்று கூறுகின்றார்.
இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்
பரிசேயர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்... அவரை நம்பவேண்டும் என்பதாகும். பரிசேயர்களுக்கு இயேசுவின் நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாம் அப்படியிருக்கக்கூடாது. ஏனெனில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுவதுபோல், ‘நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது’ (எபி 11:6). ஆகையால், நாம் இயேசுவை நம்புவோம். அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்.
*சிந்தனை*
‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுவோரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரோடு கடவுளும் இணைந்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Pages
▼
Pages
▼
No comments:
Post a Comment