Pages

Pages

Saturday, 22 February 2020

துன்பம் வரும் வேளையில சிரிங்க”



*“துன்பம் வரும் வேளையில சிரிங்க”*

*நிகழ்வு*

ஓர் ஊரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவன் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பது போன்றும் குட்டிச் சாத்தான் அவனைத் தங்களுடைய கைகளில் இருந்த கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது போன்று இருந்தது.

என்னதான் குட்டிச் சாத்தான்கள் அவனைக் கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டபோதும், அது அவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அப்பொழுது அவன் இயேசு சொன்ன இவ்வார்த்தைகளை நினைவில் கொண்டான். “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.” இவ்வார்த்தைகளை அவன் நினைவில் கொண்டதும், ஆறுதல் அடைந்தான்.

ஆம், இயேசு இவ்வுலகை வெற்றிகொண்டுவிட்டபடியால் நாம் எந்தவொரு சோதனையையும் துன்பத்தையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. மாறாக அவற்றை மகிழ்வோடு எதிர்கொள்வோம் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், நம்முடைய வாழ்வில் சோதனை வருகின்றபொழுது, அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*சோதனையின்பொழுது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்*

பொதுவாக நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது ஒன்று, கடவுளைப் பழித்துக் கொண்டிருப்போம். இல்லையென்றால், ‘எல்லாம் நம்முடைய விதி’ என்று சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருப்போம்; ஆனால், புனித யாக்கோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், அதன் ஆசிரியர், “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைக் கொண்டிருங்கள்” என்று கூறுகின்றார். உண்மையில், பல வகையான சோதனைகளுக்கு நாம் உள்ளாகும்போது, நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது. புனித யாக்கோபு சொல்வதுபோல் சோதனை வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

*மனவுறுதியோடு இருக்கவேண்டும்*

நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபோது அல்லது நம்பிக்கை சோதிக்கப்படும்பொழுது அச்சோதனையில் வீழ்ந்து விடாமல் அப்படியே இருந்தால், மனவுறுதி உண்டாகும். அந்த மனவுறுதியே நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் புனித யாக்கோபு. இக்கருத்தினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு புனித பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் சொல்கின்ற வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 1:6) என்பார் புனித பேதுரு. பல்வேறு சோதனைகளால் நாம் துயருற நேரிடலாம். அது இயற்கை. ஆனால், அப்படியே சோதனைகளைச் சந்திக்கின்றபொழுது ஒருபோதும் மனம்தளர்ந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நாம் மனம்தளர்ந்து போய்விட்டால் நாம் சோதனையில் விழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மாறாக, நாம் மனவுறுதியோடு இருந்தால், சோதனைகளை எளிதாக வெற்றிகொள்ளலாம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் மனவுறுதியோடு இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

*ஞானத்தைக் கேட்போம்*

இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில், குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதாகும். பலர் சோதனையை எதிர்கொள்ள முடியாதவர்களாக, அதில் வீழ்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டோர் மனவுறுதியோடு இருக்கவேண்டும் என்று மேலே நாம் சிந்தித்துப் பார்த்தோம். இந்த மனவுறுதி நமக்கு வேண்டும் என்றால், அதற்கு ஞானமானது தேவைப்படுகின்றது. அதனால்தான் புனித யாக்கோபு, குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்றும் அப்படிக் கேட்கின்றபோது முழு நம்பிக்கையோடு கேட்கவேண்டும் என்றும் கூறுகின்றார்.

ஆதலால் நாம் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றபோது மனம் உறுதியடைகின்றது. அதனாலேயே நம்முடைய வாழ்வில் இறைவனுடைய அருள் நிறைவாகத் தங்குகின்றது.

*சிந்தனை*

‘இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24:13) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் எத்தனை சோதனைகளும் துன்பங்களும் வந்தாலும், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

No comments:

Post a Comment