Pages

Pages

Wednesday, 31 July 2019

தூய கார்மேல் அன்னை

*தூய கார்மேல் அன்னை 

*நிகழ்வு* 

பாலஸ்தீன நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மத்தியத் தரைக்கடலுக்கு அருகே உள்ள மலைதான் கார்மேல் மலையாகும். 

ஒருசமயம் இம்மலையில் இறைவாக்கினர் எலியா இஸ்ரேயலை ஆண்ட மன்னர் ஆகாப்பிடம் “உன்னிடம் பாகால் தெய்வத்தின் பொய்வாக்கினர்கள் நானூற்றைம்பது பேர் இருக்கிறார்களே, அவர்கள் எல்லோரையும் வரவழை. பாகாலின் சார்பாக அவர்கள் எல்லோரும் நிற்கட்டும். என் கடவுளின் சார்பாக நான் மட்டும் நிற்கிறேன். ஒரு காளையை வெட்டி பலிபீடத்தில் வைப்போம். ஆனால் நெருப்பு வைக்கக்கூடாது. யாருடைய பலியை வானத்து நெருப்பு இறங்கி வந்து எடுத்துக் கொள்கிறதோ, அது தான் உண்மையான கடவுள் சம்மதமா?” என சவால் விட்டார். அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். உடனே பாகாலின் இறைவாக்கினர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். அவர்கள் அதிகாலையிலேயே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஒரு காளையை வெட்டி அதன் மீது வைத்துவிட்டு பாகாலை அழைக்க ஆரம்பித்தார்கள். “பாகாலே வாரும், நெருப்பை அனுப்பி பதிலைத் தாரும்” நண்பகல் வரை அழைத்தும் பாகால் ஒரு பதிலும் தரவில்லை. எனவே மக்கள் எல்லோரும் அந்தப் பலிபீடத்தைச் சுற்றி பாட்டுப் பாடி ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.

எலியா அவர்களை நோக்கி “இன்னும் கொஞ்சம் சத்தமாய்க் கத்துங்கள். பாவம் பாகால், அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது ஒதுக்குப் புறமாக போயிருக்கலாம், இன்னும் கத்துங்கள்” என்று கிண்டல் செய்தார். அவர்கள் “பாகாலே பதில் தாரும்” என்று தொடர்ந்து கத்தினார்கள். ஆனால் பாகால் பதில் ஏதும் சொல்லவில்லை.

அப்போது எலியா அவர்களை எல்லோரையும் அழைத்தார். “வாருங்கள், பாகாலின் பிரதிநிதிகளே வாருங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். பாவம். ஆடிப் பாடி களைத்திருக்கிறீர்கள். இப்போது நான் செய்வதைக் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு எலியா இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிப்பிடும் விதமாக பன்னிரண்டு கற்களைக் கொண்டு ஒரு பலிபீடத்தைக் கட்டினார். அந்த பலிபீடத்தைச் சுற்றிலும் வாய்க்கால் வெட்டினார். பின் பலிபீடத்தின் மீது ஒரு காளையை வெட்டி வைத்தார். காளையின் மீது பன்னிரண்டு குடம் தண்ணீர் ஊற்றினார். பலிக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தபின் அவர் கடவுளை நோக்கி, “கடவுளே!, இதோ உமது பலிப்பொருள். நீரே உண்மையான கடவுள் என்பதை இம் மக்களுக்குக் காட்டும்” என்றார். உடனே வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து எலியாவின் பலிபீடத்தில் விழுந்தது. காளையும், விறகுகளும் கொழுந்து விட்டெரிந்தன. வாய்க்கால் நீர் வற்றிப் போய்விட்டது.

இதைக் கண்ட மக்கள் அனைவரும் “ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்” என்று கத்திக் கொண்டே தரையில் விழுந்து வணங்கினார்கள். பாகாலின் போலி இறைவாக்கினர்கள் பயந்து நடுங்கி ஓடினார்கள். மக்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து எலியாவிடம் ஒப்படைக்க, எலியா அவர்கள் நானூற்று ஐம்பதுபேரையும் கொன்று ஓடையில் வீசினார். அதன் பின் அவர் மன்னனை அழைத்து, “இப்போதாவது நீ உண்மையான கடவுளை உணர்ந்து கொள், இன்று முதல் நாட்டின் பஞ்சம் விலகும். மழை பெய்யும்” என்றார். மன்னன் அவ்விடம் விட்டு அரண்மனையை அடையும் முன் பெருமழை நாட்டை குளிர்வித்தது (1 அரசர்கள் 18)

எலியா இறைவாக்கினர் போலி இறைவாக்கினர்களை வெற்றிகொண்ட  கார்மேல் மலையில், அவருடைய சீடர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களே பின்னாளில் ‘கார்மலைட்ஸ்’ என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் 1245 ஆம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின் இங்கிலாந்துக்கு மாறிப்போனார்கள்.   

*வரலாற்றுப் பின்னணி* 

முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின்னால் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த கார்மேல் சபைத் துறவிகளின் தலைவராகப் பொறுப்பேற்றவர் சைமன் ஸ்டோக் என்பவர். இவர் சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட தருணத்தில் 1251 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள், சைமன் ஸ்டோக் மரியன்னைக்கு முன்பாக வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது மரியன்னை அவருக்குக் காட்சிகொடுத்து, அவரைத் தேற்றினார். அது மட்டுமல்லாமல் கரு நிறத்தில் இருந்த உத்தரிக்கத்தைக் கொடுத்து, “இதை அணிந்துகொள், இதை அணிந்துகொள்வோரை இடர்களிலிருந்தும், நரக தண்டனையிலிருந்தும் காப்பாற்றி அமைதி தருவேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். 

அதன்பிறகு சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவி, உத்தரியம் அறிந்துகொள்கிற வழக்கத்தை சபைத் துறவிகளிடத்தில் கொண்டுவந்தார், அது இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து, பொதுமக்களும் அணிந்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

கார்மேல் அன்னை அல்லது உத்தரிக்க அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

*1. அன்னையின் பாதுகாப்பும் அன்னையின் வழி நடப்பதும்*

அன்னையானவள் சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவியிடம் காட்சியின்போது சொன்னது, “உத்தரிக்கத்தை யாராரெல்லாம் அணிந்திருக்கிறார்களே, அவர்கள் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றப் படுவார்கள்” என்பதுதான். நாம் உத்தரிக்கத்தை அணியும்போது அன்னையின் பாதுகாவலைப் பெறுகிறோம்.  அதே நேரத்தில் நாம் அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின் படி வாழ அழைக்கப்டுகின்றோம். 

மரியன்னை கிறிஸ்தவ வாழ்விற்கு முன்மாதிரி. அவள் தாழ்ச்சிக்கு, பிறரன்புக்கு, கீழ்படிதலுக்கு எடுத்துக்காட்டாக  விளங்குகின்றார். ஆகவே, நாம் அன்னையைப் போன்று தாழ்ச்சியில், பிறரன்பில், கீழ்ப்படிதலில் வளரும்போது  அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம், அதே நேரத்தில் அவளது பாதுகாவளைப் பெறுகின்றவர்கள் ஆகின்றோம்.

எனவே, இந்த நாளில் நாம் அன்னையின் வழி நடக்க முயற்சிப்போம், அன்னையின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம். 

No comments:

Post a Comment