Pages

Pages

Tuesday, 6 February 2024

மகிமை நிறை மறையுண்மைகள்.

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

07.02.2024 (புதன்)

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. ஆண்டவர் இயேசு உயித்தெழுந்ததைத்  தியானித்து,

இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 37:5-ல்,
"உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்." என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

நம் வாழ்வில் ஆண்டவர்தாம் செயலாற்றுவார் என முழுமையாக விசுவசித்து, நாம் நமது எதிர்காலத்தை ஆண்டவரின் கையில் முழுமையாக ஒப்படைத்து வீண் கவலையின்றி இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 37:39-ல்,
"நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே." என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

செய்யாத குற்றத்திற்காக சிறையில் அவதியுறும் எண்ணற்ற மக்களின் மீட்பிற்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றைய நற்செய்தியில்,
"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நம்முடைய வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தாத, வன்மத்தைக் கக்காத அன்பையும், ஆறுதலையும் அளிக்கின்ற வார்த்தைகளாக இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

நாம் மனம் மாறவேண்டும் என்றும், நாம் மனம்மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் அனைவரும் மனம்மாறி இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.


No comments:

Post a Comment