Pages

Pages

Wednesday, 31 July 2019

உன் தந்தையையும் தாயையும் மதித்து நட

*விடுதலைப் பயணம் 20: 1-17*

*“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”*

*நிகழ்வு*

சில ஆண்டுகட்கு முன்னம், சவூதி அரேபியாத் தலைநகர் ரியாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு, வயதான தந்தையை யார் வைத்துகொள்வது என்பது பற்றியது. 

விசாரணை தொடங்கியதும், அந்த வயதான தந்தையின் மூத்த மகன் பேசத் தொடங்கினார்: “எனக்கு இப்பொழுது என்பது வயது ஆகின்றது... கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் என்னுடைய தந்தையைப் பராமரித்து வருகிறேன். வீட்டில் மூத்தவன் என்பதாலும் இதுவரைக்கும் நான்தான் என் தந்தையைப் பராமரித்து வந்தேன் என்பதாலும், இனிமேலும் நானே என்னுடைய தந்தையைப் பராமரிக்க எனக்கு அனுமதியளிக்குமாறு நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”

மூத்தமகன் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன பின்பு, இளையமகன் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார்: “என்னுடைய தந்தைக்கு என் அண்ணனும் நானும் இரண்டு பிள்ளைகள். இருவர்க்கும் பத்து வயது வித்தியாசம். இதில் என்னுடைய அண்ணன் கடந்த நாற்பது ஆண்டுகளாக என் தந்தையைப் பராமரித்து வருகின்றார். இப்பொழுது அவர்க்கு வயதாகிவிட்டது என்பதாலும், இத்தனை ஆண்டுகள் அவர் என் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் இனிமேல் என் தந்தையை நான் பராமரிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்.”

இருதரப்புவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஒருகணம் ஆடிப்போய்விட்டார். “இத்தனை ஆண்டுகள் நான்தான் தந்தையைப் பராமரித்திருக்கிறேன். அதனால் இனிமேலும் நான் அந்தக் கடமையைத் தொடர்ந்து செய்வேன்’ என்று சொல்லும் மூத்த மகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா? இல்லை, ‘மூத்தவரால் தந்தையை இனிமேலும் பராமரிக்க முடியாது. அதனால் தந்தையைப் பராமரிப்பதற்கு நான்தான் சரியான ஆள்’ என்று சொல்லும் இளையமகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா?” என்று நீதிபதி ஒருநிமிடம் குழம்பித் தவித்தார். பின்னர் ஒரு தீர்க்கமான முடிவிற்குப் பின் தீர்ப்பினை இவ்வாறு வெளியிட்டார்:

“மூத்த மகன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் அவருடைய மூப்பின் காரணமாக இனிமேலும் அவரால் தந்தையைப் பராமரிக்க முடியாது என்பதாலும் தந்தையைப் பராமரிக்கின்ற பொறுப்பினை இளைய மகனிடம் இந்த நீதிமன்றம் ஒப்படைக்கின்றது.”

இத்தீர்ப்பைக் கேட்டதும் மூத்த மகன் நீதிபதியை நோக்கி, “நான் என்னுடைய தந்தையைப் பராமரிக்க முடியாமல் செய்ததன்மூலம் என்னை விண்ணக வாசலிலிருந்து வெளியே தள்ளிவிட்டீர்களே!” என்று கண்ணீர்விட்டு அழுதார். அவரோடு சேர்ந்து அந்த நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, நீதிபதி, “என்னுடைய பணிவாழ்க்கையில் இப்படியொரு வழக்கை நான் சந்தித்ததே இல்லை” என்றார். 

வயதான பெற்றோர்களை இங்கும் அங்கும் ஏன், முதியோர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கும் பிள்ளைகட்கு மத்தியில், தங்களுடைய தந்தையைப் பராமரிப்பதற்குப் போட்டிபோட்ட அந்த இரண்டு வயதான அண்ணன் தம்பிகளின் செயல்பாடு நம்மை ஆழமாகச் சிந்திக்க அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகம், தாய் தந்தையை மதித்து நட என்று சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*பத்துக்கட்டளைகளுள் ஒன்றான ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை* 

ஆண்டவராகிய கடவுள், மோசேயிடம் பத்துக்கட்டளைத் தருகின்றார். இந்தப் பத்துக் கட்டளைகளுள் ஒன்றாக இருப்பதுதான், ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாடும் சரி தாய் தந்தையை மதித்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை பல இடங்களில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்கின்றது. அதிலும் குறிப்பாக தாய் தந்தையை அடிக்கின்றவரும் சபிக்கின்றவரும் கொல்லப்படவேண்டும் என்றும் (விப 21: 15,17) பெற்றோர்க்குக் கீழ்ப்படியுங்கள் (எபே 6: 1) என்றும் சொல்கின்றது. இப்படி இருக்கையில் நாம் நம்முடைய தாய் தந்தையை மதித்தும் அவர்கட்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.
*தந்தையை (தாயை) மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்*

தாய் தந்தையை மதித்து நடப்பது, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்று சொல்லும் இறைவார்த்தை, அப்படி அவர்களை மதித்து நடப்பதால் என்னென்ன ஆசி நமக்குக் கிடைக்கின்றது என்று அழகாக எடுத்துச் சொல்கின்றது.

சீராக்கின் ஞான நூல் தந்தையரை மதிப்போர் பாவங்கட்குக் கழுவாய் தேடிக்கொள்கிறார்கள் என்றும் அன்னையை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போர்க்கு ஒப்போவர். இன்னும் பல ஆசிகளைப் பெறுவர் (சீரா 3: 3-4) என்றும் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பல்வேறு விதமான ஆசிகளைப் பெறுவதற்கு நம் தாய் தந்தையை மதித்து நடப்பதும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து வாழ்வது நல்லது. 

*சிந்தனை*

‘தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்கட்குக் கழுவாயாக இருக்கும்’ (சீரா 3: 14) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்முடைய பெற்றோர்களை மதித்து நடந்து, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிப் பாதுகாப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     


No comments:

Post a Comment