Pages

Pages

Wednesday, 31 July 2019

தூய ஹென்றி வாழ்க்கை வரலாறு

_“சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்த பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (திப 4)_

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் ஹென்றி, 972 ஆம் ஆண்டு, மே திங்கள் 6 ஆம் நாள், (ஜெர்மனி) பவேரியில் இருந்த அரச குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை ஆயர் வோல்ப்காங் என்பவரிடத்தில் கற்று, அறிவில் சிறந்து விளங்கி வந்தார். 

இப்படி இவருடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது, இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் இவர் ஜெர்மனியின் அரசராகப் பொறுபேற்றார். இவர் அரசராகப் பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 30 தான். வயதில் மிகச் சிறியவராக ஆனபோதும்கூட, இவர் மக்களை சிறப்பான முறையில் வளர்த்தெடுத்தார். இதனால் இவருக்கு மக்களுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு உண்டானது.

1014 ஆம் ஆண்டு இவர் உரோமைக்குச் சென்றபோது, அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் ஆசிர்வாதப்பர், இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, இவரை உரோமைக்கும் அரசராக நியமித்தார். அந்நாட்களில் உரோமையின் மீது பலர் படையெடுத்து வந்தார்கள். அவர்கள் அனைவரையும்  இவர் தன்னுடைய வலிமையால் வெற்றிகொண்டார். இன்னொரு சமயம் இவருடைய சகோதரரே இவருக்கு எதிராகப் போர்தொடுத்தார். அவரையும் இவர் தன்னுடைய வலிமை மிக்க கரத்தால் வெற்றி கொண்டார்.

இவர் நிறைய நிலங்களை ஆலயம் கட்டுவதற்கும் துறவு மடங்களை நிறுவுவதற்கும் தானமாகத் தந்தார். அதோடு கூட, ஏரளமான ஆலயங்களையும் துறவுமடங்களையும் கட்டித் தந்தார். இப்படி திருச்சபையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்ட இவர், குனகுந்த் என்ற பெண்மணியை மணந்தார். மணவாழ்க்கையைக் கூட, ஒரு துறவு வாழ்க்கையைப் போல் தான் வாழ்ந்து வந்தார். 

ஹென்றி ஏழை எளியவர்களிடத்தில் மிகுந்த அன்பு காட்டினார். அவர்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து மக்கள் போற்றும் அரசராக விளங்கினார். இப்படி ஆன்மீகப் பணியையும் மக்கள் பணியையும் இணைந்தே செய்து வந்த ஹென்றி 1024 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள், உடல்நலமுற்று இறந்து போனார். இவருக்கு 1146 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் யூஜின் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்*  

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. திருச்சபையின் வளர்ச்சிப் பணிகளில் பொதுநிலையினரின் பங்கு*
  
தூய ஹென்றியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது ஒரு பொதுநிலையினராக இருந்து, திருச்சபையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. ஹென்றி நினைத்திருந்தால் எப்படியும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் திருச்சபையோடு இணைந்தே பயணித்தார். திருச்சபையோடு இணைந்தே பணியாற்றினார். 

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக்காக நான் என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேனா? தாய் திருச்சபை முன்னெடுக்கின்ற காரியங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குகின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும் பயணம் சரியாக இருக்காது. திருச்சபையும் அப்படித்தான். இறையடியார்களால் மட்டும் இந்தத் திருச்சபை முழுமையாக இயங்கிவிடாது. இது முழுமையாக இயங்குவதற்கு பொதுநிலையினர் தங்களுடைய பங்களிப்பினைத் தரவேண்டும். இன்றைக்கு ஒருசில பொதுநிலையினர் நாம் எதற்கு திருச்சபையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவேண்டும்? அதில் பங்கெடுக்க வேண்டும்? என்று என்று விலகிச் செல்லக்கூடிய போக்கு நிலவிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு தவறான போக்கும்கூட. திருச்சபை வளர்வதற்கு இறைமக்களும் சரி, இறையடியார்களும் சரி ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், ஒத்துழைப்பினை நல்கவேண்டும். அப்போது தான் தாயாம் திருச்சபை நல்லவிதமாய் இயங்கும்.

தூய ஹென்றி, தான் அரசர் என்றெல்லாம் பாராமல் திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். திருப்பணியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டார்.

ஆகவே, தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சியில் நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- *மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
 
*"GOD IS LOVE"* 

No comments:

Post a Comment