Pages

Pages

Wednesday, 31 July 2019

உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் வாழ்க்கை வரலாறு

*உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் 

_“ஆண்டவர் என் கற்பாறை; என் கேடயம்; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்” (திப 18: 2)._

*வாழ்க்கை வரலாறு*

பிரடெரிக் ,நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெக்ட் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சிறுவயது முதலே கிறிஸ்தவ நம்பிக்கையில் சிறந்து விளங்கி வந்தார். வளர்ந்து பெரியவராகியபோது குருவாக மாறவேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். அதன்படியே இவர் குருவாகவும் மாறினார்.

குருவாக மாறிய பின்பு இவர் உபதேசியார்களுக்கு கிறிஸ்தவ நெறிமுறைகளைப் பற்றி போதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்பணியை இவர் சிறப்பாகச் செய்ததால், இவர் 825 ஆம் ஆண்டு உட்ரெக்ட் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு இவர் நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்தார். குறிப்பாக தன்னுடைய மறைமாவட்டம் முழுவதும் நற்செய்தியைப் பணியாளர்களை அனுப்பி, அவர்கள் மூலம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும்படி செய்தார். 

இதற்கிடையில் நெதர்லாந்தில் அரசியாக இருந்த யூதித்தின் போக்கு துன்மாதிரி இருப்பதை அறிந்த ஆயர் பிரெடரிக், அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்படியிருந்தாலும் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இவர் கிறிஸ்தவை அறியாத மக்களும் கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்; அவர்களிடமிருந்த பல மூட நம்பிக்கைகளை அகற்றப் பாடுபட்டார். இதனாலும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

இப்படி பல்வேறு எதிர்ப்புகள் இவருடைய பணிவாழ்வில் வந்தாலும் மனம் தளர்ந்து போகாமல் தன்னுடைய நம்பிக்கையில், கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். ஒருநாள் இவர் ஆயர் இல்லத்தில் இருந்த சிற்றாலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இவருக்குப் பின்னால் வந்து, இவருடைய முதுகில் கத்தியால் குத்திச் சென்றனர். இதனால் இவர் அந்த இடத்திலே இறந்து போனார். இவர் யாருடைய ஆட்களால் கொல்லப்பட்டார் என்பது இன்றுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒருசிலர் இவர் பிற சமயத்து ஆட்களால் கொல்லப்பட்டார் என்றும் சொல்வார்கள்.

இவர் இறப்பதற்கு முன்பு, “உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்” என்ற இறைவார்த்தையைச் சொல்லி உயிர் துறந்தார் (திபா 116:9)

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. அஞ்சாது ஆண்டவருக்குப் பணி செய்வோம்*

தூய பிரடெரிக்கின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் ஆண்டவருடைய அன்புப் பணியை, நற்செய்தி அறிவிப்புப் பணியை அஞ்சா நெஞ்சத்தோடு செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகின்றது. ‘இவர் அரசியாயிற்றே, இவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டினால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்று பயப்படவில்லை, அதே நேரத்தில் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தபோது அவர்களுடைய தவற்றையும் சுட்டிக் காட்டினார். அப்போதுகூட, ‘இவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றோமே, இதனால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்றெண்ணிப் பயப்படவில்லை. அவர் எப்போதும் அஞ்சா நெஞ்சத்தோடுதான் ஆண்டவருக்குப் பணிசெய்தார். தூய பிரடெரிக்கிடம் இருந்த இதே மனதிடமும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாம் ஏன் அஞ்சா நெஞ்சத்தோடும் துணிவோடும் ஆண்டவருடைய நற்செய்திப் பணியைச் செய்யவேண்டும் என்று சொன்னால், நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று (மாற் 16: 17-18) இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு, அவருடைய பணியைச் செய்கின்றபோது இவர் இத்தகைய பாதுகாப்பையும் ஆசிரையும் தருகின்றபோது, எதற்கு அஞ்சவேண்டும் என்பதுதான் இயேசுவின் கேள்வியாக இருக்கின்றது.

ஆகவே, தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குப் பணி செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


No comments:

Post a Comment