Pages

Pages

Wednesday, 31 July 2019

தூய ஷார்பெல் மஹ்லூப் வாழ்க்கை வரலாறு

*தூய ஷார்பெல் மஹ்லூப் 

_“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்._

*வாழ்க்கை வரலாறு*

ஷார்பெல், லெபனான் நாட்டில் உள்ள பே-குவா-கப்ரா என்னும் இடத்தில்  1828 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய  தந்தை இறந்து போனார். எனவே இவர் இவரது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஷார்பெல் சிறுவயது முதலே பக்தியில் சிறந்துவிளங்கி வந்தார். இவரிடமிருந்து விளங்கிய பக்தியைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். இவர் வளர்ந்து பெரியவராகிய போது மேபுங் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து, கல்விகற்று 1859 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய இருபத்தியோறாவது வயதிலே குருவாக மாறினார். 

குருவாக மாறிய பின்பு, ஷார்பெல் தன்னுடைய குருத்துவ  வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையிலும் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவருடைய ஜெப வாழ்வு, துறவுமடத்தில் இருந்த பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. சிலகாலம் மேபுங் துறவுமடத்தில் இருந்த ஷார்பெல், அதன்பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு துறவுமடம் அமைத்து, அதில் ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

புதிய இடத்தில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மிகப்பெரிய துறவியான தூய மரோன் என்பவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி முன்பைவிட ஜெபத்திற்கும் தவத்திற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். இது மட்டுமல்லாமல், கட்டாந்தரையில்தான் படுத்து வந்தார், ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வந்தார். இப்படி அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், அவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் அவர் படுத்த படுக்கையாகி 1898 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1977 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஷார்பெலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*1. ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்*

தூய ஷார்பெலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகின்ற மேலான சிந்தனை, நாம் அனைவரும் ஜெபிக்கக்கூடிய மக்களாக இருக்கவேண்டும் என்பதுதான். அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஜெபம் செய்து வந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்கவில்லை என்றாலும் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது தேவையான ஒன்றான இருக்கின்றது.

இன்றைய சூழலில் ஜெபிப்பதனால் ஏதாவது பலன், நன்மை கிடைக்குமா? என்று ஒருசிலர் கேட்கலாம். ஜெபிப்பதனால் எத்தகைய நன்மையை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதை விளக்க ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அட்லாண்டிக் பெருங்கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு நைஜீரிய எண்ணெய் கப்பலானது பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போனது. அந்தக் கப்பலில் பதிமூன்று பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் அனைவருமே இறந்துபோயிருப்பர் என எல்லாரும் நம்பினார்கள். இதற்கிடையில் அந்தக் கப்பலில் சமைப்பவராக இருந்த ஹாரிசன் என்பவர், தான் ஒரு இராட்சதக் குழாயினுள் போவதையும் தன்னுடைய உடல் குளிரில் உறைந்துகொண்டிருப்பதையும் நன்றாகவே உணர்ந்தார்.  உடனே அவர் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தைப் பற்றி தன்னுடைய மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார். 

இன்னொரு பக்கம் எண்ணெய் கப்பல் பனிப்பாறையில் மோதிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கப்பலில் பயணம் செய்த அனைவருமே இறந்துபோயிருப்பர் என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டு மீட்புப் பணியைத் தொடங்கினார். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கிய சிலமணி நேரத்திற்குள் ஒருவருடைய கையானது தண்ணீருக்குள் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அந்த மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அந்தக் கையைப் பிடித்து இழுத்தபோது, அந்தக் கையானது இவருடைய கையைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தது. அப்போதுதான் அந்த மனிதர் (ஹாரிசன்) உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிறுது நேரத்தில் மீட்புக் குழுவினர் அவரை மேலே இழுத்துக்கொண்டு வந்து, அவர்மீது வெந்நீர் ஊற்றி, அவருக்கு ஆக்ஜிசன் பொறுத்த, அவர் பிழைத்துக் கொண்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர்கள் அவரிடம், “உன்னால் மட்டும் எப்படி இந்தக் குளிரில் மூன்று நாட்களும் தாக்குபிடிக்க முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நான் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியபோது செய்தியை அலைப்பேசி வழியாக என் மனைவியிடம் சொல்ல, அவள் எனக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தாள். அந்த ஜெபத்தின் பயனாகவே உயிர்பிழைத்தேன்” என்றார்.

ஜெபம் வல்ல காரியகளைச் செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.  ஆகவே, தூய ஷார்பெல்லின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



No comments:

Post a Comment